சீனா விண்ணுக்கு அனுப்பிய 23 ஆயிரம் கிலோ எடை கொண்ட விண்கலத்தின் பாகங்கள் இன்று பூமியில் விழ வாய்ப்பு
சீனா விண்ணுக்கு அனுப்பிய 23 ஆயிரம் கிலோ எடை கொண்ட விண்கலத்தின் பாகங்கள் இன்று பூமியில் விழ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் தெற்கே வென்சாங் பகுதியில் இருந்து, 23 ஆயிரம் கிலோ எடை கொண்ட விண்கலம் ஒன்று கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி விண்ணில் செலுத்தப்பட்டது.
அதன் மூலம் சீனாவின் கட்டுமான பணியில் உள்ள டியான்காங் விண்வெளி நிலையத்திற்கு தேவையான மெங்சியான் என்ற உபகரணங்களின் தொகுதி அனுப்பப்பட்டது.
இதன்பின்னர், அந்த விண்கலம் இன்று பூமியை நோக்கி விழுகிறது.
எனினும் லோங் மார்ச் 5பி என்ற இந்த விண்கலம் பூமியின் எந்த பகுதியில் சரியாக விழும் என்ற விபரங்களை சீனா உறுதி செய்யவில்லை.
இந்த விண்கலம் மீண்டும் பூமிக்கு திரும்பும்போது, வளிமண்டலத்தில் எரிந்து சாம்பலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் லோங் மார்ச் 5பி விண்கலம், சுமார் 108 அடி நீளமும், 22 ஆயிரம் கிலோ நிறையையும் கொண்டது.
எனவே, இத்தகைய அளவு கொண்ட விண்கலத்தில் இருந்து பெரிய பாகம் வளிமண்டலத்தில் முழுவதும் எரியாமல் பூமியில் எங்காவது தாக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த காலத்தில் சீன விண்கலங்களின் சில பாகங்கள் முழுவதும் எரியாமல், அதன் பாகங்கள் பூமியில் விழுந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
அதேநேரம், இதற்கு முன்னர் சீன விண்கலத்தின் மீதமுள்ள பாகங்கள் மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.