அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட ட்ரம்ப் முனைப்பு
அமெரிக்க அதிபர் தேர்தலில் 2024 ஆம் ஆண்டு தாம் மீண்டும் போட்டியிடுவது தொடர்பான மிகவும் வலுவான மறைமுக சமிக்ஞைகளை டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவின் இடைத் தேர்தலுக்கான பிரசாரத்தில் பங்கேற்று உரையாற்றிய டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை மாளிகைக்கு போட்டியிடுவதற்கான அதிகமான சாத்தியங்கள் உள்ளதாக கூறியுள்ளார்.
அமெரிக்காவின் இடைத் தேர்தல்கள் எதிர்வரும் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், குடியரசுக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இறுதிக் கட்டப் பிரசாரங்களில் டொனால்ட் ட்ரம்ப் ஈடுபட்டுள்ளார்.
அந்த வகையில் அடுத்த ஐந்து நாட்களில் நான்கு பிரசாரங்களில் பங்கேற்கும் டொனால்ட் ட்ரம்ப், முதலாவதாக அயோவா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில், அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான தனது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
எனினும் டொனால்ட் ட்ரம்பை எதிர்த்து குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர்களாக மைக் பென்ஸ் மற்றும் புளோரிடா மாநில ஆளுநர் ரொனால்ட் டிசாண்ட்செஸ் ஆகியோரே போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில் நேற்றிரவு இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு பரந்துபட்ட அளவான மோசடி காரணமாக தாம் தோற்றதாக மீண்டும் தனது ஆதாரம் முன்வைக்கப்படாத குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இரண்டு முறை தேர்தலில் போட்டியிட்டேன், இரண்டு முறையும் வெற்றிபெற்றேன் எனக் கூறியுள்ள டொனால்ட் ட்ரம்ப், முதலில் வெற்றிபெற்ற போது - பெற்றதை விட அதிகமான வாக்குகளை இரண்டாவது தடவை பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்றில் இதுவரை எந்த பதவியில் இருக்கும் அதிபரையும் விட அதிக வாக்குகளை தாம் பெற்றதாகவும் டொனால்ட் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது நாட்டை வெற்றிகரமாகவும், பாதுகாப்பாகவும், புகழ்பெற்றதாகவும் மாற்றுவதற்காக கடந்த காலங்களை செய்ததைப் போன்று மீண்டும் செய்யப் போவதாகக் கூறி, அதிபர் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான நிலைப்பாட்டை மறைமுகமாக வெளியிட்டுள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் 72 மில்லியன் வாக்குகளையும் ஜோ பைடன் 81 மில்லியன் வாக்குகளையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.