துப்பாக்கி சூட்டில் படுகாயம் - மீண்டும் வலிமையாக போராடுவேன் - இம்ரான் கான் ஆவேச பேட்டி
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது70), நாட்டில் முன்கூட்டியே தேர்தல் நடத்த வலியுறுத்தியும், அந்நாட்டு அரசுக்கு எதிராகவும் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று பஞ்சாப் மாகாணம் வஜிராபாத் நகரில் இம்ரான்கான் தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இதில் இம்ரான்கான் கலந்து கொண்டு பேச இருந்தார்.
பேரணி அல்லாபாத் சவுக் என்ற இடத்திற்கு அருகே வந்தபோது மர்மநபர் ஒருவர் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து இம்ரான்கான் நோக்கி சுட்டார்.
இதில் ஒரு குண்டு இம்ரான்கான் காலில் பாய்ந்து அவர் படுகாயமடைந்தார். இந்த துப்பாக்கி சூட்டில் அவருடன் சென்ற அவரது தெஹ்ரீக்- இன்சாப் கட்சியின் உள்ளூர் தலைவரான அகமது சத்தா உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.
உடனடியாக இம்ரான்கான் உள்பட படுகாயமடைந்த அனைவரும் லாகூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு இம்ரான்கானுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
துப்பாக்கி சூட்டில் காயமடைந்த ஒருவர் இறந்துவிட்டதாகவும், மற்ற 9 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிரதமர் ஷபாஸ்ஷெரீப், முன்னாள் பிரதமர் நவாப் ஷெரீப் மற்றும் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் துப்பாக்கி சூட்டின் பின்புலத்தில் பிரதமர் ஷபாஸ்ஷெரீப் உள்பட 3 பேர் மீது இம்ரான்கான் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக இம்ரான்கானின் தெஹ்ரீக்- இன்சாப் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகியும், இம்ரான்கானின் நண்பருமான ஆசாத்உமர், மியான் அஸ்லாம் இக்பால் ஆகியோர் கூறுகையில், இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தின் பின்புலத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ்ஷெரீப், உள்துறை மந்திரி ராணா சனாவுல்லா, ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் பைசல் ஆகிய 3 பேர் இருப்பதாக இம்ரான்கான் நம்புகிறார்.
அவருக்கு கிடைத்த உறுதியான தகவலின் அடிப்படையிலேயே இதனை கூறுவதாக அவர் எங்களிடம் தெரிவித்தார் என்றனர்.
இதற்கிடையே இம்ரான்கான் மருத்துவமனையில் இருந்து வெளியிட்ட அறிக்கையில், "இறைவன் அருளால் எனக்கு இன்னொரு வாழ்க்கை கிடைத்துள்ளது.
மீண்டும் வலிமையுடன் போராடுவேன்" என கூறியுள்ளார். ஏற்கனவே பாகிஸ்தானில் மேஜர் ஜெனரல் நியமனம் விவகாரம் தொடர்பாக பிரதமர் ஷெரீப்க்கு எதிராக இம்ரான்கான் தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டு வந்தார்.