இம்ரான்கான் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய குற்றவாளியின் வீடியோவை வெளியிட்ட அதிகாரிகள் பணிநீக்கம்
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமரும், பிடிஐ கட்சி தலைவருமான இம்ரான் கான் நேற்று பஞ்சாப் மாகாணத்தின் வசிராபாத்தில் அரசுக்கு எதிராக பேரணி நடத்தினார். திறந்த வாகனத்தில் ஆதரவாளர்களுடன் அவர் சென்றபோது ஒரு நபர் திடீரென அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.
இதில் இம்ரான் கானின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் லாகூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இம்ரான்கானை துப்பாக்கியால் சுட்ட நவீத் என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் வசீராபாத் தாலுகாவில் உள்ள ஜோத்ரா என்ற பகுதியை சேர்ந்தவர் ஆவார்.
நவீத்திடம் இருந்து 9 எம்.எம். ரக கைத்துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. கைதாகி உள்ள நவீத் போலீசாரிடம் வீடியோ வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்நிலையில், போலீசாரிடம் நவீத் அளித்த ஒப்புதல் வாக்குமூலம் வீடியோ கசிந்துள்ளது. இதனால் வீடியோவை கசியவிட்டதற்காக காவல்துறை அதிகாரிகள் மற்றும் பிற அதிகாரிகளை அம்மாகாண முதல்வர் சவுத்ரி பெர்வைஸ் இலாஹி அதிரடியாக இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐஜி) பஞ்சாப் காவல்துறைக்கு எலாஹி உத்தரவிட்டார்.
மேலும், காவல் நிலைய ஊழியர்களின் அனைத்து மொபைல் போன்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும்,
அவை தடயவியல் தணிக்கைக்கு அனுப்பப்படும் என்றும் முதல்வர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். துப்பாக்கி சூடுக்கான நோக்கத்தை கண்டறிய விசாரணையைத் தொடங்குமாறு பஞ்சாப் ஐஜிக்கு அவர் உத்தரவிட்டார்.