தாக்குதலுக்கு பின் அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அமெரிக்க சபாநாயகரின் கணவர்
அமெரிக்க நாடாளுமன்ற பெண் சபாநாயகர் நான்சி பெலோசி. இவர் சில மாதங்களுக்கு முன்பு, தைவானுக்கு பயணம் செய்து, சீனாவின் எதிர்ப்புக்கு ஆளானவர்.
நான்சி பெலோசியின் வீடு, சான் பிரான்சிஸ்கோவில் உள்ளது. கடந்த மாதம் 28ஆம் தேதி அன்று காலையில், அந்த வீட்டுக்குள் ஒரு மர்ம நபர் அத்துமீறி நுழைந்து நான்சி பெலோசியின் கணவர் பால் பெலோசியை சுத்தியலால் கை, கால்கள், தலையில் கடுமையாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றார்.
இந்த சம்பவத்தின்போது, நான்சி பெலோசி, வீட்டில் இல்லை. காயமடைந்த பால் பெலோசி, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 82 வயதான பால் பெலோசி, ஜுக்கர்பெர்க் சான் பிரான்சிஸ்கோ பொது மருத்துவமனையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அவர் விரைவில் குணமடைவார் என்று எதிர்பார்ப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், கடந்த வாரம் அனுமதிக்கப்பட்ட பால் பெலோசி, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
42 வயதான டேவிட் டிபேப் என்பவர், பெலோசியின் சான் பிரான்சிஸ்கோ வீட்டிற்குள் நுழைந்ததாக குற்றம் சாட்டப்பட்டார். அவர் சபாநாயகரின் கணவர் பால் பெலோசியை சுத்தியலால் தாக்கினார். வீடு புகுந்து தாக்குதல் நடத்திய அந்த நபர் மீது தாக்குதல் மற்றும் கடத்தல் முயற்சி ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதிக்கான போட்டியில், துணை ஜனாதிபதிக்கு அடுத்தபடியாக சபாநாயகர் நான்சி பெலோசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.