வடகொரியா, ரஷ்யாவிற்கு இரகசியமாக பீரங்கி குண்டுகள் விற்பனை
யுக்ரைனில் நடத்தும் போருக்கான பீரங்கி குண்டுகளை, வடகொரியா, ரஷ்யாவிற்கு இரகசியமாக வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்த இரண்டு நாட்களுக்குப் பின்னர், நேற்று வெள்ளிக்கிழமை வட கொரியாவிலிருந்து ரஷ்யாவிற்கு ஒரு தொடரூந்து சென்றுள்ளது.
வணிக செயற்கைக்கோள் படங்களை மேற்கோள் காட்டி வோஷிங்டன் சிந்தனைக் குழு ஒன்று இதனை தெரிவித்துள்ளது.
வட கொரியாவின் செயற்பாடுகளை கண்காணிக்கும் 38 நோர்த் திட்டம், பல ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு தொடரூந்து இயக்கம் பாதையில் காணப்படுவது இதுவே முதல் முறை என்று கூறியுள்ளது.
இருப்பினும் ரஷ்யாவின் கால்நடை சேவை புதன்கிழமை ஒரு தொடரூந்து, வட கொரியாவிற்குள் குதிரைகளை ஏற்றிக்கொண்டு எல்லையை கடந்ததாக தெரிவித்துள்ளது. .
செய்மதி படத்தைக் கொண்டு தொடரூந்தின் நோக்கத்தை தீர்மானிக்க இயலாது,
எனினும் வட கொரியாவிலிருந்து ரஷ்யாவிற்கு ஆயுத விற்பனை பற்றிய அறிக்கைகள் மற்றும் இரண்டு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் மீண்டும் ஆரம்பிக்கும் என்ற பொதுவான எதிர்பார்ப்பு ஆகியவற்றின் மத்தியில் இந்த தொடரூந்து பயணம் இடம்பெற்றுள்ளது.
கொரோனா தொற்று காலத்தில் 2022 பெப்ரவரி 20ஆம் திகதியின் பின்னர், நாடுகளுக்கு இடையிலான ஒரே நில இணைப்பு 800 மீட்டர் துமங்காங் நட்பு பாலத்தை (கொரியா-ரஷ்யா நட்பு பாலம்) வட கொரியா மூடியது.
இந்தநிலையில் நேற்று முற்பகல் 10.24 மணிக்கு கொரிய எல்லையில் மூன்று தொடரூந்துகளை அவதானிக்கமுடிந்தது.
இதன் பின்னர் பிற்பகல் 2:29 மணிக்கு, ரஷியாவின் காசன் நிலையத்தில், எல்லையில் கொள்கலன்களுடனான குறித்த தொடரூந்துகளை காண முடிந்தது.
எனினும் இந்த தொடரூந்துகளில் இருந்து பொருள் பரிமாற்றம் நடைபெறுகிறதா என்பதை தீர்மானிக்க முடியவில்லை,
உக்ரைனில் போருக்கு கணிசமான எண்ணிக்கையிலான பீரங்கி குண்டுகளை வட கொரியா இரகசியமாக ரஷ்யாவிற்கு வழங்குவதாக வோஷிங்டனுக்கு தகவல் கிடைத்துள்ளதாக வெள்ளை மாளிகை முன்னதாக தெரிவித்திருந்தது.
எனினும் இதனை வட கொரியா, மறுத்து வருகிறது.