பொய்களை பரப்பும் டுவிட்டரை எலான் மஸ்க் வாங்கியிருக்கிறார் - ஜோ பைடன் விமர்சனம்
உலகின் மிகவும் பிரபலமான சமூகவலைதளமான டுவிட்டரை உலகின் பெரும் பணக்காரரும், டெஸ்லா நிறுவன தலைவருமான எலான் மஸ்க் வாங்கி உள்ளார்.
டுவிட்டரில் ஆட்குறைப்பு உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இதனால் கடந்த சில தினங்களாக எலான் மஸ்க் பற்றியே இணையதளங்களில் பரவலாக பேசப்படுகிறது.
இந்த நிலையில், உலகம் முழுவதும் பொய்களை பரப்பும் டுவிட்டரை எலான் மஸ்க் வாங்கியிருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து ஜோ பைடன் பேசும்போது, "நாம் அனைவரும் இப்போது எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கியதை பற்றியே கவலைப்படுகிறோம்.
அவர் வாங்கியிருக்கும் டுவிட்டர் உலகம் முழுவதும் பொய்களை அனுப்புகிறது, பொய்களை வேகமாக பரப்புகிறது. டுவிட்டரில் இனி எடிட்டர்கள் இல்லை. ஆபத்தில் இருப்பதை குழந்தைகள் எப்படி புரிந்துகொள்ள முடியும்" என்றார்.
வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் கூறுகையில், ஜோ பைடன் நிர்வாகம் சமூக ஊடக தளங்களில் வெளியாகும் "வெறுக்கத்தக்க பேச்சு" மற்றும் "தவறான தகவல்கள்" ஆகியவற்றை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார்.