கடுமையாக உழைக்க கூடியவர்கள் இந்திய மக்கள் - ரஷ்ய ஜனாதிபதி புதின் பாராட்டு
ரஷிய ஒற்றுமை தினம் தலைநகர் மாஸ்கோவில் கொண்டாடப்பட்டது. இதில் அதிபர் விளாடிமிர் புதின் கலந்து கொண்டு பேசினார். அப்போது இந்தியாவை வெகுவாக பாராட்டி பேசினார்.
அவர் கூறியதாவது:- இந்தியாவை பாருங்கள் உள்நாட்டு வளர்ச்சிக்கு தேவையான ஒரு திறமையான, கடுமையாக உழைக்க கூடிய மக்களை கொண்டு உள்ளது.
இந்தியர்கள் மிகவும் திறமையானவர்கள். ஊக்கத்துடன் செயல்படக் கூடியவர்கள். அவர்களால் இந்தியா வளர்ச்சி பெற்று வருகிறது. விரைவில் இந்தியா, வளர்ச்சியில் மிகப்பெரிய சாதனை படைக்கும்.
அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஏறக்குறைய 150 கோடி மக்களை கொண்ட நாடு அது. அதுவே அவர்களுக்கான ஆற்றலாக உள்ளது.
அந்த நாட்டு மக்கள், வளர்ச்சிக்கான மிகப்பெரிய ஆதாரமாக உள்ளனர். ஆப்பிரிக்கா நாட்டை மேற்கத்திய நாடுகள் கொள்ளையடித்து சூறையாடி சென்று விட்டன.
அது ஒரு வெளிப்படையான உண்மை. காலனி ஆதிக்கத்தில் ஈடுபட்ட நாடுகளின் செல்வசெழிப்புக்கு ஆப்பிரிக்காவை அவர்கள் கொள்ளையடித்ததுதான் காரணம். அதை ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்களும் மறைக்கவில்லை.
ஆப்பிரிக்காவின் துயரத்தில் இருந்தும், வேதனையில் இருந்துமே இந்த நாடுகள் வளம் பெற்றுள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளின் வளம் முழுமைக்கும் ஆப்பிரிக்க சுரண்டல் மட்டுமே காரணம் என்று நான் கூறவில்லை.
ஆனால் மிக முக்கிய காரணம் கொள்ளை, அடிமை வணிகம் ஆகியவையே ஐரோப்பியாவின் செழுமைக்கு முக்கிய காரணம். கிறிஸ்தவ மதத்தின் அப்படையில் ரஷியா ஐரோப்பிய கலாச்சாரத்தின் குறிப்பிடத்தக்க ஒரு அங்கம். ஆனால் ரஷிய நாகரிகமும், கலாச்சாரமும் தனித்தன்மை வாய்ந்தது. இவ்வாறு அவர் கூறினார்.