கனடாவிலிருந்து தப்பியோடிய குற்றவாளி பிரித்தானியாவில் கைது!
லண்டனிலுள்ள ஆடம்பரக் குடியிருப்பு ஒன்றில் திடீரென நுழைந்த பொலிஸார் அங்கு வாழ்ந்துவந்த ஒருவரை கைது செய்ததால் குழப்பமடைந்த அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள், அவர் பொலிஸாரால் தேடப்படும் குற்றவாளி என்பது தெரியவந்ததால் அதிர்ச்சியில் உறைந்தனர்.
அவரது பெயர் உஸ்மான் (Usman Kassim, 41). 2020ஆம் ஆண்டு, ரொரன்றோவில் கார் ஒன்றைச் செலுத்திக்கொண்டிருந்த அவர், மற்றொரு காரில் பயணித்துக்கொண்டிருந்த இரண்டு பேரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.ஆனால், அவரது குறி தப்பியதால் இரண்டு உயிர்கள் தப்பின. ஆகவே, கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்த பொலிஸார் உஸ்மானைத் தேடி வந்தார்கள். அது போக, ஏற்கனவே உஸ்மான் மீது பல குற்றச்சாட்டுகள் பதிவாகியிருந்தன. அவரைப் பிடித்துக்கொடுப்பவர்களுக்கு 30,000 பவுண்டுகள் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், உஸ்மான் கனடாவிலிருந்து தப்பியோடிவிட்டார். ஆகவே, அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து பொலிஸார் தேடிவந்தனர். இந்நிலையில், உஸ்மான் லண்டனில் செல்வந்தர்கள் வசிக்கும் பகுதி ஒன்றில், ஆடம்பர குடியிருப்பு ஒன்றில் வாழ்ந்துவருவது தெரியவந்ததையடுத்து பிரித்தானிய பொலிஸார் அவரை கைது செய்தனர்.
அவரை கனடாவுக்கு நாடுகடத்துவதற்கான முயற்சிகள் துவக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தங்கள் பக்கத்து குடியிருப்பில் வாழ்ந்துவந்த நபரை திடீரென பொலிஸார் கைது செய்ததைத் தொடர்ந்து அவர் ஒரு தேடப்படும் குற்றவாளி என்பது தெரியவந்ததால் அவரது வீட்டுக்கு அருகில் குடியிருப்பவர்கள்
அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.