புலம்பெயர்ந்தோர் என சந்தேகிக்கப்படும் சுமார் 300 பேர் சிங்கப்பூர் கடற்படையினரால் மீட்பு
கடலில் மூழ்கும் நிலையில் இருந்து படகு ஒன்றில் இருந்து புலம்பெயர்ந்தோர் என சந்தேகிக்கப்படும் சுமார் 300 பேர் சிங்கப்பூர் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
படகில் இருந்த இலங்கைப் பிரஜை ஒருவர், இலங்கை கடற்படையினரைத் தொடர்பு கொண்டு, தாங்கள் ஆபத்தில் இருப்பதாகவும், கொழும்பில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் உதவியை நாடியதாகவும் தெரிவித்ததாக இலங்கை கடற்படைப் பேச்சாளர் இந்திக்க டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் படகில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு வியட்நாம் நோக்கி அழைத்துச் செல்லப்படுவதாக சிங்கப்பூர் அதிகாரிகள் இலங்கைக்கு அறிவித்துள்ளதாக கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
கப்பலில் இலங்கையர் ஒருவர் இருப்பது மட்டுமே இலங்கை கடற்படையினருக்கு உத்தியோகபூர்வமாகத் தெரியும்.
எனினும் ஏனையவர்கள் யார் என்ற விடயம் வியட்நாமில் தரையிறங்கிய பின்னரே கண்டறியப்படும் எனவும் கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நீண்ட உள்நாட்டுப் போரில் இருந்து தப்பிக்க இலங்கையர்கள் சில சமயங்களில் அபாயகரமான சட்டவிரோத படகுப் பயணங்களை மேற்கொண்டனர்.
தற்போது இலங்கையர்கள், பொருளாதார நெருக்கடியிலிருந்து தப்பித்து வேறு நாடுகளுக்கு சட்டவிரோதமாக இடம்பெயர்ந்து வருகின்ற நிலையிலேயே இந்த சம்பவம் அறிவிக்கப்பட்டுள்ளது.
306 இலங்கை அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் காற்றினால் தாக்கப்பட்டு, பிலிப்பைன்ஸ் மற்றும் வியாட்நாமுக்கு இடையே தத்தளித்துக் கொண்டிருப்பதாக குரல் பதிவு ஒன்று வெளியாகியுள்ளது.
இக் குரல் பதிவில் கப்பலில் தத்தளித்து கொண்டிருக்கும் 306 இலங்கையர்களையும் காப்பாற்றுமாறும் ஐ.நாவிடம் இதனை தெரியப்படுத்தும் படியும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் முன்னாள் சர்வதேச செய்தியாளர், பிரான்சிஸ் கரிசன் Frances Harrison மேற்படித் தகவலை உறுதிப்படுத்த முடியுமா என தற்போது டுவிட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
300 இலங்கை தமிழர்களுடன் (30 குழந்தைகள்) கப்பல் ஒன்று பிலிப்பைன்ஸ் கடற்கரையில் மூழ்கும் நிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
ஜி.பி.எஸ் சரிசெய்வது அவசியம் என்று பயணிக்கும் ஒருவரின் குரல் பதிவு வெளியாகியுள்ளது.