இலங்கையில் குரங்கு அம்மை பரவும் அபாயம்!

Mayoorikka
1 year ago
இலங்கையில் குரங்கு அம்மை பரவும் அபாயம்!

உலகின் ஏனைய நாடுகளில் பரவிவரும் குரங்கு அம்மை தொற்றுக்குள்ளான நோயாளர்கள் பலர் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் அபாயம் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ZOOM தொழிநுட்பத்தினூடாக இடம்பெற்ற குரங்குக் காய்ச்சல் தொடர்பான விசேட கலந்துரையாடலின்போது உரையாற்றிய சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் நிபுணர் வைத்தியர் சிந்தன பெரேரா, வெளிநாடுகளில் இருந்து அறிகுறியற்ற நோயாளர்கள்கூட இலங்கைக்கு வரமுடியும் எனவும்  தெரிவித்தார்.

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட நோயாளரை சிறப்பாக நிர்வகித்து, அவரை சிகிச்சைக்காக அரச மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால் இதுபோன்ற நோயாளிகள் அதிகம் வரும் அபாயம் உள்ளதென்றும் இந்த நோய் உலகின் ஏனைய பகுதிகளில் இன்னும் இருப்பதால், ஒரு கட்டத்தில் அதிகமான வழக்குகள் பரவக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.

தற்போது அறிகுறியுடன் அடையாளம் காணப்பட்ட ஒருவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சில நேரங்களில் அறிகுறியற்ற நோயாளிகள்கூட இலங்கைக்கு வரலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சிலருக்கு அறிகுறிகள் இல்லாமல் இருக்கலாம். எனவே நமது அனைத்து சுகாதார அதிகாரிகளும் சமூக மருத்துவ பிரிவுகளும் இவ்விடயத்தில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை, குரங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி போட வேண்டிய அவசியம் தற்போது இல்லை என சுகாதார அமைச்சின் பொது சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர்  மகேந்திர ஆனந்த் தெரிவித்துள்ளார்.