எனது காலில் இருந்து 3 குண்டுகள் எடுக்கப்பட்டன - இம்ரான் கான் தகவல்
பாகிஸ்தான் அரசுக்கு எதிராக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் லாகூரில் இருந்து இஸ்லாமாபாத்தை நோக்கி பேரணி நடத்தினார்.
அப்போது இம்ரான்கானை நோக்கி வாலிபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் அவரது காலில் குண்டுகள் பாய்ந்தது. லாகூரில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட இம்ரான்கானுக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதற்கிடையே சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய இம்ரான் கான் அளித்த பேட்டியில் கூறியதாவது:- எனது வலது காலில் இருந்து 3 குண்டுகளை எடுத்தனர்.
இடது காலில் சில துண்டுகள் இருந்தன. அதை அவர்கள் அப்படியே விட்டுவிட்டார்கள். என்னை கொல்ல சதி நடந்தது பற்றி புலனாய்வு அமைப்புகள் மூலம் எனக்கு தகவல் கிடைத்தது.
3½ ஆண்டுகள் நான் ஆட்சியில் இருந்ததை நினைவில் கொள்ளுங்கள். உளவுத்துறை அமைப்புகள், பல்வேறு அமைப்புகளுடன் எனக்கு தொடர்பு உள்ளது.
எனக்கு எதிராக கொலை சதி இரண்டு மாதங்களுக்கு முன்பே உருவானது. இது நான் பதவி நீக்கம் செய்யப்பட்ட போது தொடங்கியது.
அன்று முதல் எனது கட்சி உடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு பதிலாக எனது கட்சிக்கு மகத்தான ஆதரவு கிடைத்தது' என்றார்.