இன்றைய வேத வசனம் 09.11.2022: சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்
சில நொடிப்பொழுது சரீர வேட்கையின் மனநிறைவிற்காக வாழ்வின் மிகச்சிறந்த மேன்மைகளை விற்றுவிடக் கூடிய அவலநிலை மனிதனுக்கு அவ்வப்போது ஏற்படுவது சாத்தியமே.
ஏசா அதனையே நிறைவேற்றினான். வயல்வெளியிலிருந்து வந்த ஏசா களைப்படைந்தவனாய் பசியுற்றிருந்தான்.
அச்சமயத்தில் சிவப்பான பயற்றங்கூழை யாக்கோபு சமைத்துக்கொண்டிருந்தான். ஒரு கிண்ணம் “சிவப்புக் கூழ்” வேண்டுமென்று ஏசா கேட்டபோது, யாக்கோபு, “நிச்சயமாகத் தருவேன். ஆனால் நீ எனக்கு முதலில் அதற்குப் பதிலாக உன்னுடைய சேஷ்ட புத்திர பாகத்தை விற்றுப்போடு” என்னும் பொருள்படப் பதில் கூறினான்.
ஒரு குடும்பத்தில் மூத்த மகனின் உயர்ந்த சிலாக்கியமே சேஷ்ட புத்திரபாகம். அந்த சிலாக்கியம் பிற்காலத்தில் குடும்பத்தின் தலைவன் என்ற சிறப்பையும், சொத்தில் இரண்டு பங்கைப் பெறுவதற்குரிய உரிமைகளையும் தரக்கூடிய மேன்மையான நிலையாகும்.
ஆனால், அத்தகைய ஒரு கட்டத்தில் சேஷ்டபுத்திரபாகம் தகுதியற்ற ஒன்று என்றே ஏசா கருதினான். “என்னைப் போன்று பட்டினியாய்க் கிடக்கிறவனுக்கு சேஷ்டபுத்திரபாகம் என்ன நன்மை பயக்கும்? என்றே அவன் எண்ணினான்.
தனது பசியை ஆற்றிக்கொள்வதற்காக அவன் எதையம் கொடுக்க ஆயத்தமாயிருக்கும் அளவிற்கு பசி அவனை ஆட்டிப்படைத்தது.
ஒரு நொடிப்பொழுது வேட்கையைத் தணிக்க நிலைபேறான சிறப்பைத் தத்தம்செய்ய அவன் முன்வந்தான். ஆகவே அவன் தகாத பேரத்தில் ஈடுபட்டான்.
இதுபோன்றதொரு நாடகம் நாள்தோறும் பலருடைய வாழ்க்கையில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
பல ஆண்டுகளாக நற்சான்று பெற்றவனாய் வாழும் விசுவாசி, நல்ல குடும்பத்தின் அன்பையும், கிறிஸ்தவ ஐக்கியத்தின் நன்மதிப்பையும் உடையவனாக இருக்கிறான்.
அவன் பேசுகிறபோது, அவனுடைய சொற்கள் ஆவிக்குரிய அதிகாரம் உடையதாயிருக்கின்றன. அவனுடைய நற்பணி தேவனுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றிருக்கிறது. விசுவாசிகளுக்கோர் அருமையான எடுத்துக்காட்டாகத் திகழ்கிறான்.
ஆனால், கடுமையான சரீர வேட்கை அவனுக்குள் கணநேரத்தில் உண்டாகிறது. காமவெறியில் சிக்குண்டவன் அந்த வெறியைத் தீர்க்காவிட்டால், தான் அழிந்துவிடுவோம் என்று எண்ணுகிறான்.
இந்தச் சரீர இச்சையைத் தீர்ப்பதைதத் தவிர வேறொன்றும் அவனுக்கு முக்கியமானதாகக் காணப்படுவதில்லை.
விவேகமான சிந்தனை அவனைவிட்டு அகன்று போய்விடுகிறது. இந்த முறைகேடான உறவுக்காக எல்லாவற்றையும் இழந்துவிடத் துடிக்கிறான்.
ஆகவே அவன் மதியீனத்தில் பாய்ந்துவிழுகிறான். கணநேர எழுச்சிக்காக, தேவனுடைய புகழ்ச்சியையும், தன் சொந்த சாட்சியையும், குடும்பத்தின் மேன்மையையும், நண்பர்களின் நன்மதிப்பையும், அப்பழுக்கற்ற கிறிஸ்தவ குணநலன்களையும் விட்டு தடம் மாறுகிறான்.
“நீதியின்மேல் கொண்ட தாகத்தை மறந்துவிடுகிறான், தெய்வீக ஐக்கியத்தின் மகிழ்ச்சியை உதறி எறிகிறான், ஆத்துமாவை இருளடையச் செய்கிறான்.
வளம்பெற்ற வாழ்வை இழந்துபோகிறான். அவப்பெயரின் பெருமழை அவனுடைய எஞ்சிய காலமெல்லாம் அவன் தலைமீது பொழிய இடங்கொடுக்கிறான்.
எள்ளி நகையாடுவோரின் இழிச்சொல்லிற்கு அவனுடைய பெயரும், அவனுடைய விசுவாசமும் ஆளாக இடங்கொடுக்கிறான்.
இதனையே வேதம், “ஒரு கலயம் கூழுக்காகத் தனது சேஷ்டபுத்திர பாகத்தை விற்றுவிட்டான்” என இடித்துரைக்கிறது.
ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருநேர உணவிற்காக தன் புத்திரசுவிகாரத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள். (#எபிரேயர்.12:16). ஆமென்! அல்லேலூயா!!