உக்ரைன் கெர்சன் நகரில் இருந்து ராணுவத்தினரை வெளியேற ரஷ்யா உத்தரவு
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 9 மாதங்களாகிறது. இதில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் ரஷிய படைகள் வசம் சென்றுள்ளன.
இதற்கிடையே, உக்ரைன் தெற்கு பகுதி நகரமான கெர்சனுக்குள் புகுந்த ரஷிய ராணுவத்தினர் அங்குள்ள வீடுகளை ஆக்கிரமித்துடன் பொருட்களை கொள்ளை அடிப்பதாகவும், பொதுமக்களை காலி செய்யுமாறு உத்தரவிட்டு வருவதாகவும் உக்ரைன் குற்றம்சாட்டியது.
அந்த நகரத்தில் 3 லட்சம் பேர் இருப்பதாக கருதப்படும் நிலையில், மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருவதாகவும், இது உக்ரைனின் நாசவேலை என்றும் மின்சாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் ரஷிய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
ஆனால் ரஷிய படையினர் 1.5 கி.மீ. மின் கம்பிகளை அகற்றி விட்டதாக உக்ரைன் படையினர் குற்றம் சாட்டினர். அப்பகுதியை மீண்டும் உக்ரைன் கைப்பற்றும் வரை மின்சாரம் திரும்ப வராது என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், உக்ரைனின் கெர்சன் நகரில் இருந்து ராணுவத்தை வெளியேறுமாறு ரஷியா உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த ஜெனரல் செர்ஜி சுரோவிகின், நாங்கள் எங்கள் வீரர்களின் உயிரையும் எங்கள் பிரிவுகளின் சண்டை திறனையும் காப்பாற்றுவோம்.
அவற்றை மேற்கு கரையில் வைத்திருப்பது பயனற்றது. அவர்களில் சிலர் மற்ற முனைகளில் பயன்படுத்தப்படலாம் என தெரிவித்தார்.