இஸ்ரேல் படை மீது தாக்குதல் நடத்த வைத்திருந்த கையெறி குண்டு வெடித்து பாலஸ்தீனிய சிறுவன் மரணம்
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
காசா முனை பகுதியை ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வருகிறது. அதேவேளை மேற்குகரை பகுதி பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் நிர்வகித்து வருகிறார். ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது. அதேவேளை, ஹமாஸ் போன்று மேலும் பல ஆயுதமேந்திய குழுக்களும் மேற்குகரை மற்றும் காசா முனையில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆயுதமேந்திய குழுக்களை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்புகளாக கருதி தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனிடையே, மேற்குகரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக, மேற்குகரையின் நப்லஸ், ஜெனின் நகரங்களில் கடந்த சில நாட்களாக மோதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், மேற்குகரையின் நப்லஸ் நகரில் பலடா அகதிகள் முகாம் அருகே ஜோசப் ஷ்ரேன் என்ற வழிபாட்டு தலம் உள்ளது. இந்த வழிபாட்டு தலத்தில் வழிபாடு நடத்த நேற்று இஸ்ரேலியர்கள் சென்றனர். அவர்களின் பாதுகாப்பிற்காக இஸ்ரேலிய படையினர் சென்றனர்.
அப்போது, இஸ்ரேலிய படையினர் மீது பாலஸ்தீனியர்கள் தாக்குதல் நடத்தினர். பலடா அகதிகள் முகாமை சேர்ந்த மஹ்டி ஹஷாஷ் என்ற 15 வயது பாலஸ்தீனிய சிறுவனும் தாக்குதல் நடத்த திட்டமிட்டான்.
இதற்காக, கையெறி குண்டை இஸ்ரேலிய படையினர் மீது வீச முற்பட்டான். அப்போது, எதிர்பாராத விதமாக கையெறி குண்டு சிறுவன் மஹ்டி ஹஷாஷின் கையிலேயே வெடித்தது. இதில், படுகாயமடைந்த சிறுவன் மஹ்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.