சூறாவளி எச்சரிக்கை - மீண்டும் தள்ளி போன நாசாவின் நிலவு ஆய்வு ராக்கெட் பயணம்

Prasu
1 year ago
சூறாவளி எச்சரிக்கை - மீண்டும் தள்ளி போன நாசாவின் நிலவு ஆய்வு ராக்கெட் பயணம்

அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பு நிலவு மற்றும் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறது. இதன்படி, 2025-ம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நிலவுக்கு ஆர்டெமிஸ் என்ற ராக்கெட் அனுப்பும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.

எனினும், ஆர்டெமிஸ்-1 ராக்கெட்டில் ஆட்கள் யாரும் செல்லவில்லை. ஆர்டெமிஸ்-2 திட்டத்தில் விண்வெளி வீரர்களை அனுப்ப திட்டமிடப்பட்டு உள்ளது.

இதன்படி, விண்ணில் அனுப்பப்படும் ஆர்டெமிஸ்-1 ராக்கெட் உதவியுடன், அதனுடன் இணைக்கப்பட்ட ஆரியன் என்ற விண்கலம் நிலவின் மேற்பரப்பில் இருந்து 60 மைல்களுக்கு தொலைவில் இறங்கி ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது. இந்த ஆர்டெமிஸ்-1, 42 நாட்களில் சுமார் 1.3 மில்லியன் மைல்கள் பயணிக்கும்.

கடந்த ஆகஸ்டு 29-ந்தேதி இந்திய நேரப்படி மாலை 6 மணியளவில் ராக்கெட்டை விண்வெளிக்கு அனுப்பும் பணி தொடங்க திட்டமிடப்பட்டது. கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து இந்த விண்கலம் புறப்படுவதற்கான கவுன்ட்-டவுன் தொடங்கப்பட்டது.

ஆனால், சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டதன் காரணமாக 40-வது நிமிடத்தின்போது கவுன்ட்-டவுன் நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, ஆர்டெமிஸ்-1 திட்ட ஹைட்ரஜன் குழு, ராக்கெட் ஏவுதல் இயக்குனருடன் அடுத்தகட்ட நடவடிக்கைகளை பற்றி விவாதித்தனர்.

இந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்ட நிலையில் ஆர்டெமிஸ்-1 ராக்கெட் மீண்டும் செப்டம்பர் 3-ந்தேதி விண்ணில் ஏவப்படும் என கூறப்பட்டது. எனினும், இந்த திட்டம் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் சக்தி வாய்ந்த ஐயான் என்ற சூறாவளி தாக்க உள்ளது என தகவல் வெளியானது. இது இந்த ராக்கெட் செலுத்த கூடிய பகுதியை கடந்து செல்ல கூடும் என்றும் கூறப்பட்டது. இதனால், ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து அதனை பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு சென்றனர். சூறாவளி புயல், எரிபொருள் கசிவு உள்ளிட்ட காரணங்களுக்காக 3 முறை இந்த பயண திட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.