திலினி பிரியமாலியின் தொலைபேசி உரையாடல் சிக்கிய முக்கிய புள்ளி

Kanimoli
1 year ago
திலினி பிரியமாலியின் தொலைபேசி உரையாடல் சிக்கிய முக்கிய புள்ளி

பல கோடி நிதி மோசடியில் ஈடுபட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி மற்றும் கொழும்பு ரிட்ஸ் கார்ல்டன் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜானகி சிறிவர்தன ஆகியோரின் தொலைபேசி உரையாடலில் மற்றுமொருவர் சிக்கியுள்ளார்.

அவர்களின் உரையாடலில் கிரிஷாந்த என்பவரின் பெயர் அடிக்கடி உச்சரிக்கப்பட்ட நிலையில் அவர் தொடர்பில் தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கிரிஷாந்த என்பவரை பொலிஸாரால், அடையாளம் காண முடிந்ததுடன், அவர் முன்னாள் அரசியல்வாதி எனவும், தற்போது அவர் மந்திரவாதியாகவும் செயற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் எதிர்வரும் நாட்களில் அவரது வாக்குமூலங்களைப் பதிவு செய்யவுள்ளதென குறிப்பிடப்படுகின்றது.

ஜானகி சிறிவர்தனவின் பிள்ளைக்காக சக்தி வாய்ந்த மத வழிபாடு செய்வதாக கூறி கிரிஷாந்த என்பவர் 6 கோடி ரூபாவை பெற்றுக்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தற்போது வெளிவந்துள்ள ஜானகி சிறிவர்தன மற்றும் திலினி பிரியமாலி ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல் ஒன்றின் ஒலிப்பதிவில் ஞானசார தேரரின் பெயரும் கூறப்படுகின்றது.

மேலும் கிரிஷாந்த என்பவர் ஐக்கிய தேசியக் கட்சியில் சில காலம் தென் மாகாண சபை உறுப்பினராகவும் இருந்த அவர், பின்னர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக பொதுஜன பெரமுனவுடன் இணைந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.