நாட்டின் பிரதான சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு ஜனாதிபதி விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை

Kanimoli
1 year ago
நாட்டின் பிரதான சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு ஜனாதிபதி விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை

அரசியல் அமைப்பு பேரவையில், நாட்டின் பிரதான சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு ஜனாதிபதி விக்கிரமசிங்கவிடம் தமிழ் மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

அரசியலமைப்பின் 21வது திருத்தத்தின் கீழ் நிறுவப்பட்ட முக்கிய முடிவெடுக்கும் அமைப்பான பத்து உறுப்பினர்களைக் கொண்ட அரசியலமைப்பு பேரவைக்கு  (CC) பெரும்பான்மை உறுப்பினர்களை நாடாளுமன்றம் இன்னும் நியமிக்கவில்லை.


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை தனது வரவு செலவுத் திட்ட உரையை ஆற்றுவதற்கு முன்னர், நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்படவுள்ள ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களும் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும், இதுவரை நான்கு உறுப்பினர்கள் மட்டுமே இந்த பேரவையில் அங்கம் வகிக்கின்றனர்.


ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஆகியோர், பேரவையின்  அதிகாரபூர்வ உறுப்பினர்களாகும் அதேவேளை ஜனாதிபதி விக்கிரமசிங்க, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை பேரவைக்கான  தனது வேட்பாளராக நியமித்துள்ளார்.


இதேவேளை அரசியல் அமைப்பு பேரவைக்கு, ஒரு உறுப்பினரை பெரும்பான்மையான அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள்  பரிந்துரைக்க வேண்டும், அதே சமயம் எதிர்க்கட்சித் தலைவரின் கட்சி மற்றொருவரை பரிந்துரைக்கும். எதிர்க்கட்சித் தலைவரின் கட்சியைச் சேராத சிறுபான்மைக் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிக் குழுக்களும் ஒரு உறுப்பினரை பரிந்துரைக்கலாம். ஏனைய மூன்று உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே இருந்து நியமிக்கப்படுவார்கள்.


தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஐக்கிய மக்கள் சக்தியின்  வேட்பாளராக மலையகத் தமிழர் ஒருவரை நியமிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுத்ததாகவும், ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். .


அத்துடன் இலங்கையின் இனப் பன்முகத்தன்மையை" பிரதிநிதித்துவப்படுத்தும் நான்கு உறுப்பினர்களை  நியமிப்பதில் ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை விவாதிக்க சபாநாயகர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரை சந்திப்பதற்கு அழைப்பு விடுக்குமாறு மனோ .கணேசன் இந்த வாரம் ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு கடிதம் எழுதியுள்ளார். . இலங்கையின் நான்கு பிரதான சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களை பரிசீலிக்குமாறு ஜனாதிபதியிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். சிங்களவர்கள், வடக்கு மற்றும் கிழக்கு தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் மலையகத் தமிழர்கள், ஒருமித்த கருத்துடன் பரிந்துரைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.


கடந்த வியாழன் அன்று நாடாளுமன்றத்தில் பேசிய ஜனாதிபதி விக்கிரமசிங்கவும், சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கும் அவற்றின் செயல்பாடுகள் சுமுகமாக நடைபெறுவதற்கும் வழி வகுக்கும் என்பதால்,அரசியல் பேரவைக்கான  உறுப்பினர்களை விரைவாக நியமிக்குமாறும்  நாடாளுமற்றில் வேண்டுகோள் விடுத்தார்.


இதற்கிடையில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இல்லாத மூன்று பேரை பேரவைக்கு  உறுப்பினர்களாக நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரும் செய்தித்தாள் விளம்பரம் வெளியிடப்படவுள்ளது. இதன்படி விருப்பமுள்ள தரப்பினர் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இரண்டு வார கால அவகாசம் வழங்கப்படும். இந்த விளம்பரம் வார நாள் மற்றும் வார இறுதி நாளிதழ்களில் வெளியிடப்படும் மற்றும் விண்ணப்பத்திற்கான வடிவம் அதிகாரப்பூர்வ நாடாளுமன்ற இணையதளத்தில் வெளியிடப்படும்