அதிகார பகிர்வு தொடர்பில் குறிப்பிடத்தக்க எந்தவொரு விடயமும் உள்ளடக்கப்படவில்லை - எம்.ஏ.சுமந்திரன்
ராஜபக்ச தரப்பில் இருந்து வெளியேறி, சுயாதீனமாக செயற்படும் சுதந்திர மக்கள் காங்கிரசினர் இன்று வெளியிட்டுள்ள கொள்கை திட்டங்கள் சிறந்ததொரு ஆரம்பம் என்ற போதிலும் அதில் அதிகார பகிர்வு தொடர்பில் குறிப்பிடத்தக்க எந்தவொரு விடயமும் உள்ளடக்கப்படவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பில் நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டாலும் அதன் மூலம் எந்தவொரு பயனும் இல்லை என்பதை சுதந்திர மக்கள் காங்கிரசினர் உணர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பில் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அதில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சியில் சுயாதீனமாக செயற்படும் சுதந்திர மக்கள் காங்கிரஸ் இன்று கொழும்பில் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார கொள்கை திட்டங்களை வெளியிட்டு வைத்தது.
குறிப்பாக டலஸ் அலகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா, பேராசிரியர் ஜி.எல்.பிரீஸ் உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். இதனைத் தவிர எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, சரத் பொன்சேகா, முஜிபூர் ரஹ்மான், குமார வெல்கம, டிலான் பெரேரா, பாட்டலி சம்பிக்க ரணவக்க, தயாசிறி ஜயசேகர, உதய கம்மன்பில, எம்.ஏ.சுமந்திரன், ரிஷாட் பதியூதீன், முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்டவர்களும் பங்கேற்றிருந்தனர்.