வவுனியாவிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி நல்லிணக்க செயலகத்தை திறந்து வைக்கவுள்ளார்

Prathees
1 year ago
வவுனியாவிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி நல்லிணக்க செயலகத்தை திறந்து வைக்கவுள்ளார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,2022, நவம்பர் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் வவுனியாவிற்கு விஜயம் செய்யும் போது இன நல்லிணக்கத்திற்கான அடுத்த நகர்வு ஆரம்பிக்கப்படும் என்று அரசாங்கத் தரப்பு தெரிவித்துள்ளது. 

நல்லிணக்க செயலகத்தை திறந்து வைக்கவுள்ள அவர், தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களை சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்கவுள்ளார்.

எனினும் இன நல்லிணக்கச் செயற்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஆபிரகாம் சுமந்திரன், நல்லிணக்கத்தை துரிதப்படுத்துவதற்கும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கும் ஜனாதிபதி செயலகத்தில் புதிய பிரிவொன்று ஸ்தாபிக்கப்படுவது தொடர்பில் தமது கட்சியுடன் ஆலோசிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். 

அமைச்சரவை அமர்வுகளின் பின்னர் ஒவ்வொரு வாரமும் நல்லிணக்க வேலைத்திட்டத்தை உருவாக்குவதற்காக அமைச்சர்கள் குழு ஒன்று கூடுவது குறித்து தகவல் வெளியாகியுள்ள நிலையிலேயே  அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு விருப்பம் தெரிவித்த ஜனாதிபதியின் அண்மைக்கால அறிக்கைகளை தாம்  வரவேற்பதாக அவர் தெரிவித்துள்ளார்.    

இப்போது தமது வார்த்தைகளை நடைமுறைப்படுத்துவது அவரது கையில் உள்ளது என்றும் சுமந்திரன் தெரிவித்தார்.