அமெரிக்க மற்றும் ரஷ்ய உளவுத்துறை தலைவர்கள் நேருக்கு நேர் சந்திப்பு

Kanimoli
1 year ago
அமெரிக்க மற்றும் ரஷ்ய உளவுத்துறை தலைவர்கள் நேருக்கு நேர் சந்திப்பு

அமெரிக்க மற்றும் ரஷ்ய உளவுத்துறை தலைவர்கள் நேருக்கு நேர் சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பு துருக்கியின் தலைநகர் அங்காராவில் நேற்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது, உக்ரைனில் மொஸ்கோவின் அணு ஆயுத அச்சுறுத்தல் மற்றும் ரஷ்யாவால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அமெரிக்க கைதிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ இயக்குநர் வில்லியம் பேர்ன்ஸ் மற்றும் அவரது ரஷ்ய உளவுப்பிரிவு தலைவரான செர்ஜி நரிஷ்கின் ஆகியோருக்கு இடையேயான கலந்துரையாடல் அமெரிக்க தரப்பின் முன்முயற்சியால் இடம்பெற்றது என்று ரஷ்யாவின் கிரெம்ளின் கூறியுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு இரண்டு நாட்டு அதிகாரிகளுக்கு இடையேயான உயர்மட்ட பொதுக் கூட்டமாக இது அமைந்துள்ளது.
இந்தநிலையில் அமரிக்க பிரதிநிதி பேர்ன், போரின் முடிவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று வெள்ளை மாளிகை கூறியது.
இதேவேளை கடந்த ஆகஸ்ட் மாதம், அமெரிக்க கூடைப்பந்து நட்சத்திரம் பிரிட்னி கிரைனருக்கு எதிராக கஞ்சா கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு அவருக்கு ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை ரஷ்யாவினால் விதிக்கப்பட்டது.
ரஷ்யாவில் கஞ்சா பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்றாலும், மொஸ்கோ கிரைனரை அரசியல் கைதியாக பயன்படுத்தியதாக அமெரிக்க தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.