2023 வரவுசெலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு, வாக்கெடுப்பு இன்று!
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் அல்லது வரவு செலவுத் திட்ட உரையின் இரண்டாம் வாசிப்பு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால், நிதியமைச்சர் என்ற வகையில், நவம்பர் 14 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் முதல் வருடாந்த வரவு செலவுத் திட்ட உரையும் இதுவாகும்.
இதனையடுத்து கடந்த ஆறு நாட்களாக நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்தநிலையில் இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் ஏழாவது நாள்,அமர்வு இன்று முற்பகல் நாடாளுமன்றம் கூடும்போது ஆரம்பமாகவுள்ளது.
இன்றைய விவாதத்தைத் தொடர்ந்து, மாலை 5 மணியளவில் யோசனை மீது வாக்கெடுப்பு நடத்தப்படும்.
இதற்கிடையில், 2023 வரவுசெலவுத்தி;ட்ட மதிப்பீடுகளின்படி, மொத்த வருவாய் மற்றும் மானியங்கள் 3,415 பில்லியன் ரூபாய்கள்.
மொத்த செலவினம் 5,819 பில்லியன் ரூபாய்கள்.
இதன்படி, ஏற்படக்கூடிய வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையை இந்த ஆண்டு மதிப்பிடப்பட்ட 9.8 சதவீதத்திலிருந்து அடுத்த ஆண்டு 7.9 சதவீதமாகக் குறைக்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.
இதன் கட்டங்களாகவே பாரிய வரிவிதிப்புக்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
இதேவேளை, குழுநிலை விவாதம் நாளை (23) முதல் 13 நாட்களுக்கு நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
இதனையடுத்து, 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 8ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.