நியூயார்க் மாகாணத்தில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ள ஜனாதிபதி ஜோ பைடன்
அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.
குறிப்பாக நியூயார்க் மாகாணத்தில் வரலாறு காணாத அளவுக்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.மாகாணம் முழுவதும் பலத்த காற்றுடன் பனி கொட்டி வருகிறது.
அங்குள்ள எரி நகரில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 24 மணி நேரத்தில் 180 செ.மீ. பனிப்பொழிவு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இதனால் சாலைகள், வீடுகள், வாகனங்கள் பனிப்போர்வை போர்த்தி காட்சியளிக்கின்றன.
குளிர் வாட்டி வருவதால் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கியுள்ளர்.இதனால் அவர்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் குவிந்துள்ள பனியை அப்புறப்படுத்தப்படும் பணிகள் நடந்து வருகின்றன.
இதனிடையே கடுமையான பனிப்பொழிவை எதிர்கொண்டுள்ள நியூயார்க் மாகாணத்தில் ஜனாதிபதி ஜோ பைடன் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். அங்கு பனிப்பொழிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதப்படுத்த அவர் உத்தரவிட்டுள்ளார்.