இன்றைய வேத வசனம் 23.11.2022: இதோ, நான் சமாதானத்தை ஒரு நதியைப்போலவும்
ஒரு நதியுண்டு, அதின் நீர்க்கால்கள் தேவனுடைய நகரத்தையும், உன்னதமானவர் வாசம்பண்ணும் பரிசுத்த ஸ்தலத்தையும் சந்தோஷிப்பிக்கும். (சங்கீதம் 46:4).
ஒரு தேசத்தின் செழுமை, அதில் ஓடும் நதியை பொறுத்திருக்கிறது. அசீரியரின் தலைநகரமான நினிவேயைச் சுற்றிலும், டைகிரீஸ் என்ற ஆறு ஓடி அப்பட்டணத்திற்கு உலகப்பிரகாரமான பெருமையை தேடித் தந்தது.
ஆனால் எருசலேமைச் சுற்றி ஓடுவது, மிகச் சிறிய ஆறாகிய கீதரோன்தான். ஆயினும் அது பரிசுத்த ஸ்தலத்தை சந்தோஷிப்பித்து மகிழ்விப்பதின் காரணம், உன்னதமானவர் அதன் நடுவிலே வாசம் பண்ணுவதினாலேயே!
உங்களுக்கு ஒரு நதியுண்டு. பரிசுத்த ஆவியானவரே அந்த நதி! அவர் உங்கள் தாகத்தை தீர்க்கிறார். ஆவியின் கனிகளை உங்களில் உருவாக்குகிறார்; அது மட்டுமல்ல பரலோக ராஜ்யத்தை உங்களுக்குள் கொண்டு வருகிறார்.
தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது. (ரோமர் 14:17)
பரிசுத்தாவியானவராகிய நதி, உங்களில் ஓடி, உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையைச் செழுமையாக்க அனுமதிக்கிறீர்களா? அவர் உங்களை ஜீவனுள்ள தேவனுடைய நகரமாக, பரிசுத்த ஸ்தலமாக சந்தோஷிப்பிக்கிறாரா?
"விசுவாசமாயிருக்கிறவனெவனோ அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்" (யோவான் 7:38). ஆம், உங்களுக்கு ஒரு நதியுண்டு!
ஏசாயா 66:12
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால் இதோ, நான் சமாதானத்தை ஒரு நதியைப்போலவும், ஜாதிகளின் மகிமையைப் புரண்டு ஓடுகிற ஆற்றைப்போலவும் .... பாயும்படி செய்கிறேன், ஆமென்... அல்லேலூயா!!