குரண பிரதேசத்தில் கூரிய ஆயுதத் தாக்குதலில் நபர் ஒருவர் பலி
சீதுவ காவல்துறை பிரிவுக்குட்பட்ட குரண பிரதேசத்தில் கூரிய ஆயுதத் தாக்குதலில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த தாக்குதல் நேற்று (21) இரவு இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் குரண பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர்.
உயிரிழந்த நபர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் குரண பகுதியில் வசித்து வந்தபோது, அருகில் வசிப்பவர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, அவர்கள் அனைவரும் அதே பகுதியில் உள்ள தனது தாயின் வீட்டில் தற்காலிகமாக தங்கியுள்ளனர்.
அப்போது, வாள் ஏந்திய சுமார் நான்கு பேர் அவரைத் தேடி வந்ததாகவும், அவரைக் கண்டதும் சந்தேக நபர்கள் துரத்திச் சென்று வாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றதாகவும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, வாள்வெட்டுக்கு இலக்கான நபரை மருத்துவமனையில் அனுமதித்த போதிலும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வாள்வெட்டு மேற்கொண்டதாக சந்தேகத்தின் பேரில் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை சீதுவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.