வருங்கால மனைவியின் வீட்டில் திருடிய நபரை பொலிஸார் கைது
குருணாகல், பொல்பித்திகம பிரதேசத்தில் திருமணம் செய்யவிருந்த தனது வருங்கால மனைவியின் வீட்டில் 8 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்கத்தை திருடிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அண்மையில் பொல்பித்திகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தொடர்ச்சியாக வீடுகளை உடைத்து திருடியமை தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டனர்.
அத்துடன், அவர்களிடம் இருந்து திருடப்பட்ட பொருட்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர். அந்தச் சம்பவத்தின் பின்னர், கடந்த காலங்களில், வீடுகளில் பொருட்களை இழந்தவர்கள் பொலிஸ் நிலையத்திற்கு வந்து பொருட்களைச் சரிபார்த்துள்ளனர்.
இதன் போது, பொலிஸ் நிலையத்திற்கு வந்த பெண் ஒருவர் திருட்டில் ஈடுபட்டவர்களில் ஒருவரை தனது வருங்கால மருமகன் என மணமகளின் தாயார் அடையாளம் காட்டியுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் மல்சிறிபுர பொலிஸ் பிரிவைச் சேர்ந்தவர் எனவும், மற்றைய இருவரும் பன்சியகம பொலிஸ் பிரிவைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருதெனிய பிரதேசத்தில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது இவர்கள் மூவரும் 14 வீடுகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
எதிர்வரும் ஜனவரி மாதம் திருமணம் நடைபெறவிருந்த நிலையில் இந்த திருட்டுச் சம்பவம் அம்பலத்திற்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.