அலரி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த நபர் கைது
கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள அலரி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த நபர் நேற்று புதன்கிழமை (நவ 23) கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது அலரி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் அடையாளம் காணப்பட்ட நபர் கொழும்பு தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட குறித்த நபர் 32 வயதுடையவர் எனவும் அவர் பத்தரமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.