இலங்கையில் செலவிடக்கூடிய வெளிநாட்டு ஒதுக்கத்தின் பெறுமதி 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள்!
இலங்கையில் செலவிடக்கூடிய வெளிநாட்டு ஒதுக்கத்தின் பெறுமதி 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, 2022 ஒக்டோபர் இறுதியில் இலங்கையின் உத்தியோகப்பூர்வ வெளிநாட்டு நாணய ஒதுக்கம் 1.7 பில்லியன் டொலர்களாக இருந்தது.
இதில், சீன மக்கள் வங்கி நாணய இடமாற்ற வசதிக்காக வழங்கிய 1.4 பில்லியன் ரூபாய்களும் அடங்குகின்றன.
இந்தநிலையில், சுற்றுலாத்துறையின் வளர்ச்சி வெளிநாட்டு ஒதுக்கத்தில் நன்மையை ஏற்படுத்தும் என மத்திய வங்கி எதிர்வுகூறியுள்ளது.
இதேவேளை, பணம் அச்சிடலில் படிப்படியாக குறைவு ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு 341 பில்லியன் ரூபாய் அச்சிடப்பட்டது.
எனினும், கடந்த ஜனவரி மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் 47 பில்லியன் ரூபாய் மட்டுமே அச்சிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.