பிரித்தானியாவில் மருத்துவர்களின் தாமதமான சிகிச்சை காரணமாக சிறுவன் உயிரிழப்பு !
பிரித்தானியாவில் மருத்துவர்களின் தாமதமான சிகிச்சை காரணமாக சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பப்பட்ட பின்னர் இறந்த 5 வயது சிறுவனுக்கு முன்னதாக சிகிச்சை அளித்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம் என்று அவரது குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை Yusuf Mahmud Nazir என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தனது மருமகனின் கடுமையான தொண்டை நோய்த்தொற்றுக்கு நரம்பு வழி நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மூலம் சிகிச்சை அளிக்குமாறு ரோதர்ஹாம் மருத்துவமனை ஊழியர்களிடம் கெஞ்சி கேட்டதாக சிறுவனின் மாமா கூறியுள்ளார்.
குழந்தைகள் அறைகளில் மருத்தவர்கள் இல்லை எனவும் படுக்கைகள் கிடைக்கவில்லை எனவும் தன்னிடம் கூறப்பட்டதாக அவர் கூறினார். இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பது குறித்து மருத்துவமனை அறக்கட்டளை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
நவம்பர் 13 அன்று Yusuf தொண்டை வலியால் நோய்வாய்ப்பட்டார். அடுத்த நாள் Yusufஇன் மாமா மருத்துவரிடம் சென்று நுண்ணுயிர் எதிர்ப்பிகளை பரிந்துரைத்தார்.சிறுவனின் உடல்நிலை மோசமடைந்ததால், தெற்கு யார்க்ஷயரில் உள்ள ரோதர்ஹாம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பல மணிநேரம் காத்திருந்த பிறகு, Yusuf என்ற சிறுவனை ஒரு மருத்துவர் சோதித்து பார்த்தவர், சிறுவனுக்கு இதுவரை கண்டிராத டான்சில்லிடிஸ் நோயின் மோசமான நிலை இருப்பதாக தெரியவந்துள்ளது.
நோய் கண்டறியப்பட்ட போதிலும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை.
யூசுப்பின் உடல்நிலை மேலும் மோசமடைந்தபோது, மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் அறைக்கு தந்தை அஹமட் அழைத்து மகனுக்கு சிகிச்சையளிக்குமாறு கெஞ்சியுள்ளார்.
எனினும் மிகவும் தாமதமாக வழங்கப்பட்ட சிகிச்சையினால் சிறுவன் உயிரிழந்துள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.