ஜப்பானிய பிரஜையை ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்ட டிலந்த மாலகமுவ உட்பட மூன்று பிரதிவாதிகள் விடுதலை
ஜப்பானிய பிரஜை ஒருவரிடமிருந்து 06 இலட்சம் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொண்டு நம்பிக்கையை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த பந்தய சம்பியனான டிலந்த மலகமுவ உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளை விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்ல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டின் பிரதான சாட்சியான ஜப்பானிய பிரஜையான ஜோசுஸ்கி ஹயாஷி கடந்த 7 வருடங்களாக நீதிமன்றத்திற்கு வந்து சாட்சியமளிக்காத நிலையில், வழக்கின் பிரதிவாதிகளை விடுவிக்குமாறு டிலந்த மாலகமுவ சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர்.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, டிலந்த மாலகமுவ உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு, ஜப்பானிய பிரஜை ஒருவரிடமிருந்து 600,000 அமெரிக்க டொலர்களை சூப்பர் வீடமைப்புத் தொகுதியொன்றை நிர்மாணிப்பதற்காக பெற்றுக்கொண்டதன் மூலம் கிரிமினல் நம்பிக்கையை மீறியதாக டிலந்த மலகமுவ உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.