பிரித்தானிய விமானப் பயணிகள் கையில் எடுத்துச் செல்லும் பைகளுக்கு அமுல்படுத்தப்படவுள்ள கட்டுப்பாடுகள் தொடர்பில் மாற்றம்!
பிரித்தானிய விமானப் பயணிகள் கையில் எடுத்துச் செல்லும் பைகளுக்கு அமுல்படுத்தப்படவுள்ள கட்டுப்பாடுகள் தொடர்பில் மாற்றம் ஏற்படவுள்ளது.
அதற்கமைய, இதுவரையில் 100 மில்லி லிட்டர் அளவுகொண்ட திரவத்தைத்தான் எடுத்துச்செல்ல முடியும் என்ற வரம்பை 2024ஆம் ஆண்டு நடுப்பகுதிவாக்கில் அகற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்குள் அதிநவீன பாதுகாப்பு உணர்கருவிகள் பொருத்தப்படக்கூடும் என்பதே அதற்குக் காரணம் என்று பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்தன.
மிகவும் துல்லியமான முப்பரிமாண உணர்கருவிகளான அவை பொருள்களை அனைத்துத் திசைகளிலிருந்தும் சோதனையிட உதவும்.
அதுகுறித்து இன்னும் ஆராயப்படுகிறது என்றும் அதிகாரபூர்வ அறிவிப்பு அடுத்த சில வாரங்களில் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மடிக்கணினிகள், கைக்கணினிகள், திரவங்கள் முதலியவற்றைக் கையில் எடுத்துச் செல்லும் பயணிகள் அவற்றைப் பாதுகாப்புச் சோதனைக்கு உட்படுத்தவேண்டும்.
திரவத்தின் அளவு 100 மில்லி லிட்டரைத் தாண்டக்கூடாது. அத்துடன் வெளியில் தெரியக்கூடிய பிளாஸ்டிக் பைககளில்தான் அதனை வைத்திருக்கவேண்டும்.
பிரித்தானியாவில் 16 ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்திய விதிமுறை இதுவாகும்.
மென்பானத்தைப் போன்ற வெடிபொருள்களைக் கொண்டு விமானங்களைத் தகர்க்கும் நோக்கில் தீட்டப்பட்ட பயங்கரவாதச் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அது நடப்புக்கு வந்தது.