ரஷ்யா நடத்தி வரும் இந்த ஒன்பது மாத போர் தாக்குதலில் சுமார் 16,000 ஏவுகணைகள் உக்ரைன் மீது ஏவப்பட்டுள்ளது
ரஷ்யா நடத்தி வரும் இந்த ஒன்பது மாத போர் தாக்குதலில் சுமார் 16,000 ஏவுகணைகள் உக்ரைன் மீது ஏவப்பட்டு இருப்பதாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் தெரிவித்துள்ளார்.
ரஷ்யர்கள் அதிகம் குடியிருக்கும் கிழக்கு உக்ரைனிய பகுதியான டான்பாஸை மீட்பதாக தெரிவித்து தொடங்கிய ரஷ்யாவின் போர் தாக்குதல், உக்ரைனிய நகரங்கள் முழுவதும் பரவி அந்த நாட்டின் பெருவாரியான உள்கட்டமைப்பு வசதிகளை அழித்தொழித்து உள்ளது.
கடந்த பெப்ரவரி 24 ம் திகதி தொடங்கிய உக்ரைன் மீதான ரஷ்ய போர் தாக்குதலானது இன்று ஒன்பது மாதங்களை கடந்தும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படாமல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
உக்ரைன் மீதான தாக்குதல் முடிவை எட்டப்படாமல் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த நிலையில் கடந்த ஒன்பது மாத போர் தாக்குதலில் ரஷ்யா உக்ரைன் மீது சுமார் 16,000 ஏவுகணைகளை ஏவி இருப்பதாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த ஏவுகணை தாக்குதலில் 97 சதவிகிதத்தை ரஷ்யா பொதுமக்கள் மீது குறிவைத்து நடத்தியுள்ளது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் நாங்கள் தீவிரவாத அரசுக்கு எதிராக போராடுகிறோம், நிச்சயமாக உக்ரைன் இதில் வெற்றி பெறும் மற்றும் போர் குற்றவாளிகளை நீதிக்கு முன் கொண்டு வரும் என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் ரஷ்ய தாக்குதல் குறிகளை வெளிப்படுத்தியுள்ளது.
புறநகர் பகுதிகள் மற்றும் கிராமங்கள் மீது 12,300+ ஏவுகணையும், வீடுகள் மீது 1,900 ஏவுகணையும், ராணுவ அமைப்புகள் மீது 500+ ஏவுகணையும், போக்குவரத்து கட்டமைப்புகள் மீது 250+ ஏவுகணையும், சக்தி நிலையங்கள் மீது ~220 ஏவுகணையும், மற்றவை மீது 800+ ஏவுகணையும் ரஷ்யா ஏவி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.