பெண்கள் கடத்தல் விவகாரம்: ஓமான் தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் கைது
ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் மூன்றாவது செயலாளராகப் பணியாற்றிய ஈ. குஷான் என்ற நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இன்று (29) அதிகாலை 3.57 மணியளவில் ஓமானின் மஸ்கட் நகரிலிருந்து இலங்கை திரும்ப கட்டுநாயக்க விமான நிலையத்தினை வந்தடைந்துள்ளார்.
சுற்றுலா விசாவில் ஓமனுக்கு வேலைக்குச் சென்ற பெண்களை பாலியல் துன்புறுத்தல் மற்றும் மனித கடத்தல் உட்பட பல ஊழல் குற்றச்சாட்டுகள் சம்பந்தப்பட்ட நபர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
அவரைக் கைது செய்ய குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று (28) திறந்த பிடியாணையைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குற்றச்சாட்டுகள் இருந்த போதிலும், ஈ. குஷான் ஓமானிய இலங்கைத் தூதரகத்தில் தங்கியிருந்தார், மேலும் அவர் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளில் செல்வாக்கு செலுத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதே நபர் மீது இதற்கு முன்னர் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போதும், அதிகாரிகளுடனான உறவுகளின் ஊடாக அவை அடக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.