அதிகரிக்கும் எச்.ஐ.வி தொற்றாளர்கள்: பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எடுத்த நடவடிக்கை!

எச்.ஐ.வி தொற்றாளர்களின் துரித அதிகரிப்பு காரணமாக, பொலன்னறுவை மாவட்டத்தில் பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள கவுண்டர்களின் மூலம் மாதாந்தம் 50,000 ஆணுறைகளை இலவசமாக வழங்க பொலன்னறுவை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் இறுதி நாள் வரை பொலன்னறுவை மாவட்டத்தில் 16 எச்.ஐ.வி நோயாளர்கள் (எயிட்ஸ் நோயாளிகள்) கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 05 பேர் சிறுவர்கள் எனவும் பொலன்னறுவை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டபிள்யூ.கே. சரத்சந்திர குமாரவன்ச தெரிவித்தார்.
பொலன்னறுவை மாவட்டத்தில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை 82 எனவும் அவர்களில் பெரும்பாலானோர் ஒரே பாலின உறவுகளினால் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் தெரிவித்தார்.
இதன்காரணமாக பொலன்னறுவை மாவட்டத்தில் பஸ் நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் இந்த கொண்டம் கவுண்டர்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும், அங்கு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் இதன் மூலம் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.



