பாடசாலை உணவு விடுதியில் போதைப் பொருள்களை மறைத்து வைத்து பொலிஸாருக்கு பொய்யான தகவல் வழங்கிய நபர் கைது

கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலை ஒன்றின் சிற்றுண்டிச்சாலையில் இனந்தெரியாத 38 போதை மாத்திரைகள் மற்றும் 7 ஐஸ் போதைப்பொருள் பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
மல்வத்துஹிரிபிட்டிய கூட்டுறவு பெற்றோல் நிலையத்தில் பாதுகாவலராக கடமையாற்றும் 60 வயதுடைய நபர் ஒருவர் பொய் வழக்கு பதிவு செய்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு பொய்யான தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபருக்கும் பாடசாலையின் சிற்றுண்டிச்சாலை பொறுப்பதிகாரியான பெண்ணுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக சந்தேகநபர் இந்த போதைப்பொருட்களை சிற்றுண்டிச்சாலையில் மறைத்து பொலிஸாருக்கு பொய்யான தகவலை வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அழைப்பாணையின் பேரில் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் இன்று கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.



