யார் யாருக்கு அரசாங்க உதவி கிடைக்கப் பெற வேண்டும் என வீடு வீடாகச் சென்று ஆராய முடிவு

யார் யாருக்கு அரசாங்க உதவி கிடைக்கப் பெற வேண்டும் என வீடு வீடாகச் சென்று அரசாங்க அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் ரஞ்சித் சியம்பலாபிடிய நேற்று (08) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்த கருத்துக்களுக்கு விளக்கமளிக்கையிலேயே நிதி இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.
தற்போது நிவாரண உதவிகளைக் கோரி சமூக நலன்புரி அமைச்சிற்கு 34இலட்சம் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்ததுடன், அரசாங்கம் மக்களின் நிலைமைகளை நேரில் கண்டறிந்து இந்த உதவியை வழங்குவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் கூறினார்.
இதேவேளை 2023 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தில் நிதிஅமைச்சர் ரஞ்சித் சியம்பளாபிட்டிய கலந்துகொண்டு உரையாற்றுகையில் ,அரசாங்கம் சரியான பொருளாதார பாதையில் நகர்ந்து வருவதாக தெரிவித்தார்.
தற்சமயம் எரிபொருள்,எரிவாயு என்பனவற்றிற்கான தட்டுப்பாடு குறைவடைந்துள்ளது. மின்சாரத் துண்டிப்பு நேரமும் குறைக்கப்பட்டுள்ளது. சவால்மிக்க நேரத்தில் இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள எதிர்க்கட்சி முன்வரவில்லை என்று அவர் கூறினார்.



