மாமனிதர் யோசப் பரராஜசிங்கம் அவர்களின் 17 ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் வைத்து நத்தார் தினமன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற திருப்பலி ஆராதானையின் போது 2005ம் ஆண்டு இனந்தெரியாத நபர்களினால் இவர் சுட்டுக் கொலைச் செய்யப்பட்டார்.
மாமனிதர் யோசப் பரராஜசிங்கம் 1934 கார்த்திகை 26 பிறந்தார். சிறந்த பத்திரிகையாளராக, சமூக சேவையாளராக பணியாற்றிய காலத்தில் மனைவியின் பெயரில் (சுகுணம் ஜோசப்) கட்டுரைகளை எழுதிவந்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வருவதற்க்கு இவர் எழுதிய கட்டுரைகள் பல மிகவும் பிரசித்தமானவை. மட்டக்களப்பு மாவட்டத்தில் பத்திரிகையாளர் அமைப்பு ஒன்றை ஏற்படுத்துவதிலும் முன்னின்றவர். அந்த அமைப்பின் ஆரம்பத் தலைவராகவும் இருந்தார்.
அறுபதுகளில் தமிழரசுக் கட்சி மூலம் அரசியலுக்கு நுழைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் முக்கிய தமிழ்த் தலைவராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் விளங்கினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு முன்னின்று உழைத்தவர்.
தமிழ்த் தேசிய விடுதலைக்காக அற வழியில் போராடிய ஜோசப் பரராஜசிங்கம் மட்டக்களப்பு சென் மேரி தேவாலயத்தில் மார்கழி 24. 2005 அன்று நடந்த நத்தார் நள்ளிரவு திருப்பலி பூசையின் போது அரசின் இராணுவ ஒட்டுக் குழுவினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். ஜோசப் பரராஜசிங்கம் அவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரால் மாமனிதர் விருது வழங்கப்பட்டது.
இக்கொலை தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிள்ளையான் கடந்த நல்லாட்சிக் காலத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரிக்கப்பட்டார். 2020 இல் கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதியானதும் பிள்ளையான் சிறையிலிருந்து விடுதலையாகி பாராளுமன்றம் சென்றார்.
பிள்ளையான் தற்போதைய ரணில் ஆட்சியில் அமைச்சராக இருப்பது குறிப்பிடத்தக்கது, ஆனால் இதுவரையும் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைக்கு நீதி கிடைக்கப் பெறவில்லை. இன்றும் கொலையாளிகளை அரசு பாதுகாத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




