மோடி-அதானி உறவு; கார்கே - நிர்மலா இடையே வாக்குவாதம்!
அதானி குழுமத்தின் மீது நிதி மோசடி குற்றச்சாட்டுகளை ஹிண்டன்பர்க் முன்வைத்த நாளிலிருந்து, எதிர்க்கட்சிகள் முறையான விசாரணைக்கு அழைப்பு விடுத்தன. இந்த மாபெரும் ஊழலில் பொதுமக்களின் பணமும் சிக்கியுள்ளது, மேலும் அதானி குழும நிறுவனங்களுக்கு எல்ஐசி, எஸ்பிஐ போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் முதலீடு செய்து கடன் கொடுத்ததால் பிரச்னை ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று நாடாளுமன்றத்தில் பேசினார்; பிரதமர் எதற்கும் அஞ்சவில்லை என்றால், அதானி குழுமத்தின் மீதான ஜேபிசி விசாரணை குறித்து எதுவும் கூறாமல் தவிர்ப்பது ஏன்? பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரின் சொத்து மதிப்பு ஒரு காலத்தில் பல மடங்கு அதிகரித்துள்ளது. இது எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை.
அதாவது இரண்டரை ஆண்டுகளில் 13 முறை அதானி சொத்து மதிப்பு உயர்வு கண்டுள்ளது. 2014 ஆம் ஆண்டில் 50000 கோடியாக இருந்த சொத்து மதிப்பு, 2019 ஆம் ஆண்டில் 1 லட்சம் கோடியாக உயர்ந்தது. பிறகு 12 லட்சம் கோடி வரை அதானின் சொத்து மதிப்பு உயர்வதற்கு என்ன மந்திரம் நடந்ததென்று தெரியவில்லை என கார்கே பேசினார்.
கார்கேவின் உரைக்கு பதில் அளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்; பிரதமர் மோடிக்கு எதிராக முற்றிலும் தவறான தகவல்களை உள்நோக்கத்துடன் பரப்பி வருகின்றனர். மேலும் பாரதத்தின் பிரதமரை வெளிப்படையாக அவமதித்து வருவதாக கூறினார்.
கார்கே பதிலளித்தார்: நான் உண்மையைப் பேசினால் நான் தேசவிரோதியா? நான் மற்றவர்களை விட தேசப்பற்று கொண்டவன். நான் பூமியின் மகன் என்று குறிப்பிட்டார்.
கார்கே சரியான தகவல்களை முன்னாள் நிதியமைச்சரிடம் கேட்க வேண்டும் என்றும் பியூஷ் கோயல் கூறினார். பியூஷ் கோயல் பேசியதாவது: பங்குச் சந்தை நிலவரம் குறித்த துல்லியமான தகவல்களை முன்னாள் நிதியமைச்சரிடம் கார்கே கேட்க வேண்டும். இதில் அரசு தலையிட எந்த காரணமும் இல்லை.
நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசியதாவது; பிரதமர் மோடியும் அதானியும் நல்ல நண்பர்கள். மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது இவர்களின் நட்பு வளரத் தொடங்கியது. இதுவே அதானியின் வர்த்தகத்தின் மதிப்பும் அதன் ரியல் எஸ்டேட் மதிப்பும் அதிகரிப்பதற்குக் காரணம் என்று அவர் சுட்டிக்காட்டினார். இருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பதாக ராகுல் விமர்சித்தார்.