மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடந்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 109 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 197 ரன் எடுத்தது.
உஸ்மான் கவஜா 60 ரன்னும் , லபுஷேன் 31 ரன்னும் எடுத்தனர். ஜடேஜா 4 விக்கெட்டும் , அஸ்வின் , உமேஷ் யாதவ் தலா 3 விக்கெட் கைப்பற்றினார்கள். 88 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை ஆடியது.
முதல் இன்னிங்சை போலவே இந்த இன்னிங்சிலும் இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பினார்கள். 2-வது இன்னிங்சில் 60.3 ஓவர்களில் 163 ரன்னில் சுருண்டது.
இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 76 ரன்னே இலக்காக இருந்தது. புஜாரா அதிகபட்சமாக 59 ரன்னும் , ஸ்ரேயாஸ் அய்யர் 26 ரன்னும் எடுத்தனர். நாதன் லயன் அபாரமாக பந்து வீசி 64 ரன் கொடுத்து 8 விக்கெட் சாய்த்தார்.
ஸ்டார்க் , மேத்யூ குனமேன் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. 76 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை ஆடியது. உஸ்மான் கவாஜாவும், டிரெவிஸ் ஹெட்டும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
ஆஸ்திரேலியாவுக்கு முதல் ஓவரிலேயே இந்தியா அதிர்ச்சி கொடுத்தது. அஸ்வின் வீசிய ஆட்டத்தின் 2-வது பந்திலேயே உஸ்மான் காவாஜா ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்.
முதல் ஓவரிலேயே விக்கெட் கிடைத்ததால் இந்திய வீரர்கள் மகிழ்ச்சியில் துள்ளினார்கள். ஆனால் 2-வது விக்கெட்டான டிரெவிஸ் ஹெட்-லபுஷேன் ஜோடி சிறப்பாக விளையாடியது.
இந்த ஜோடி ஆஸ்திரேலியாவை எளிதில் வெற்றி பெற வைத்தது. அந்த அணி 18.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 78 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
டிரெவிஸ்ஹெட் 49 ரன்னும், லபுஷேன் 28 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியா உலக டெஸ்ட் சாம்பியன் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
முதல் 2 டெஸ்டில் அபார வெற்றியை பெற்ற ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த டெஸ்டில் தோல்வியை தழுவியது. முதல் 2 டெஸ்டை போலவே இந்த டெஸ்டும் 3 நாட்களில் முடிந்துவிட்டது.
இந்த டெஸ்டில் தோற்றாலும் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் வருகிற 9-ந்தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது.