துளசியின் காதல் . . இன்றைய சிறுகதை 04-03-2023.

#சிறுகதை #காதல் #இன்று #லங்கா4 #short story #Love #today #School #Lanka4
துளசியின் காதல் . . இன்றைய சிறுகதை 04-03-2023.

துளசியின் காதல் . .
++++++++++++++++++++++

அன்று துளசியின் செயற்பாடுகள் இயல்புக்கு மாறாக இருந்தன.
அவள் கொஞ்சம் பதட்டமாக இருந்தாள்.
அப்படி அவள் நடந்து கொள்கிறாள் என்றால், அவளை யாரோ திட்டியிருக்கிறார்கள்.

துளசி இளகிய மனம் உடையவள்.யாரும் கடும் சொல் கொண்டு பேசினால் அழுது விடுவாள்.கொஞ்சம் முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு இருந்தால் போதும் பயந்து விடுவாள்.
தொனியை கொஞ்சம் உயர்த்திப் பேசினால் போதும் தடுமாறிப் போவாள்.

க.பொ.த சாதாரண தரம் படித்துக் கொண்டிருந்தாள்.கெட்டிக்காரி.பதட்டக்காரி.அவளது ஊரில் விஞ்ஞானம் படிப்பிக்கும் வரதன் சொல்வான்.

"தடியை கையில் வைத்திருந்தால் அந்த வகுப்பில் படிப்பிக்கிற, எதையும் அவள் விளங்கிக் கொள்ள மாட்டாள்.அதனால் தான் துளசி இருக்கும் வகுப்பில் நான் தடி வைத்திருப்பதில்லை." என்பான்.

உண்மை தான்.வரதனும் துளசியும் ஊர்ப் பாடசாலையில் தான் படித்தார்கள்.இருவரும் நான்கு வகுப்பு இடைவெளியில், வயது வித்தியாசம் கொண்டவர்கள். 

துளசி தொடர்ந்து படிக்கும் வாய்ப்பை பெற்றாள்.அவளது படிப்பு தொடர்ந்து நல்லபடியாகவே இருந்தது.ஆனாலும் வரதன்  ஒன்பதாம் ஆண்டு  இறுதிப்பரீட்சையோடு பாடசாலையை விட்டு இடைவிலகி விட்டான்.அவனது வீட்டுச் சூழல் அப்படி.

வரதனிடம் கேட்டுப் படிக்கும் மாணவர்களது எண்ணிக்கை குறைந்தபாடில்லை. வரதன் பொறுப்பில்லாமல் நடந்ததில்லை.படிக்கும் விருப்பிருந்தும் படிக்கும் வசதியில்லாத நிலையில் பாடசாலையை விட்டு விலகி விட்டான்.

பாடசாலைக் காலத்திலேயே வரதனிடம் கேட்டுப் படிக்கும் மாணவர்கள் வரதனின் இந்த நிலைகண்டு மனம் நொந்து கொள்வார்கள்.
கூடப் படிக்கும் மாணவர்களும் அப்படித்தான்.ஊராரும் வரதனைக் காணும் போது, மனம் நொந்து பேசிக்கொள்வார்கள்.இருந்தும் அவர்களால் என்ன தான் செய்ய முடியும்?

அறைய சூழலில் அவரவர் தங்களை தாங்களே பார்த்துக் கொள்வது பெரும்பாடு. அடுத்தவரை பார்த்து மனமிரங்கிட முடியும்.உதவிட எதுவுமிருக்காது.

வரதனின் பெற்றோரை யாரும் அறிந்ததில்லை.அவனும் கூடவே.அவனை வளர்க்கும் தாய்க்கு மட்டும் தான் தெரிய வாய்ப்பிருக்கிறது.இருந்தும் அவனை இந்த நிலைக்கு கொண்டு சென்றதும் அவன் வளர்ப்புத் தாய் தான்.
அல்லது, பாருங்கள். அவனை பற்றி  அவனை பெற்றவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கலாம்.இருந்தும் நல்ல கெட்டிக்கார பையன் வரதன்.

பாடசாலையை விட்டு இடை விலகிய பின்னர் வரதனின் போக்கு மாறவில்லை.எதனைக் கண்டாலும் அதனைப்பற்றி அறிய ஆர்வம்.கண்டது கற்கப் பண்டிதன் ஆவான்.வரதன் இப்படித்தான்.

அந்த வரதனிடம் தான் துளசி கேட்டுப்படிப்பாள்.
 எல்லோரும் போல.

ஆனாலும், வரதன் மீது  அதிக விருப்பு இருந்தது அவளுக்கு. மற்றவர்கள் அவன் மீது காட்டும் மதிப்பு அவளை ஈர்த்திருக்கும். வரதனது அன்பான அணுகலும் பொறுப்பான பதிலுரைப்பும் இன்னும் ஈடுபாட்டை அதிகமாக்கியிருக்கலாம்.

 "வரதனண்ணா" என அழைக்கும் அவளது அழைப்பில் அன்பு கலக்கத் தொடங்கியது.

நடத்தையிலும் மெல்ல மாற்றம் ஏற்பட்டது.

துளசி;

இப்போதெல்லாம் அதிக ஆர்வத்தோடு படிக்கத் தொடங்கி விட்டாள்.
இரவில்  அதிக நேரமானாலும் இருந்து படிக்கும் பழக்கம் வளர்ந்தது.

அப்போதெல்லாம் கைப்பேசி இல்லை.படிக்கப் போகும் போது கண்டு கதைத்துக் கொள்வாள்.வரதனுக்கு சின்ன சின்ன சிறு நொருக்குத் தீனிகளை வாங்கிக் கொண்டு போவாள்.வரதன் படிப்பிக்கும் திலீபன் கல்வி நிலையத்திற்கு.

திறமை காரணமாக ஆசிரியராக உள்வாங்கப்பட்டான் வரதன்.அவனிடம் இருந்த விளக்கி, எடுத்துரைக்கும் திறன் தனி.எப்படியான கடினமான பாடப்பரப்புக்களையும் இலகுவாக விரைவாக புரிந்திடும்படி விளக்கி விடுவான்.

சின்ன வயதில் ஆசிரியராக உள்வாங்கப்பட்ட வரதனுக்கு அப்போது வயது இருபது.

உள்ளாட்டுப் போர் அப்போது உக்கிரம் பெற்றிருந்தது.
விடுதலை கோரிய போராட்டத்தில்,  அந்த நாட்டின் வடக்கு மக்கள் உணர்வோடிருந்தனர். எல்லா வகையிலும் அவர்களை நெருக்கடிக்குள்ளாக்கினர்.
இருந்தும் அவர்கள் சோர்ந்து போனதாக இல்லை.

போதையால் அழிந்து போவதிலும் உரிமைப் போருக்காக உயிரை விடுதல் உன்னதமானது தான்.

இருக்கும் குறைந்த வளங்களோடு உச்ச பயனை அடையும் ஆற்றலை பெருக்கினர்.அந்த வழியில் தான் வரதனின் ஆற்றல் அங்கு பயன்பட்டது.ஒன்பதாம் ஆண்டு வரை கல்வி கற்று இடைவிலகிய வரதனால் உயர்தரம் உயிரியல் பிரிவு மணாவர்களுக்கு கற்பிக்க முடியும் என்றால்,அந்த முயற்சி பாரட்ட வேண்டியதே!

துளசி, வரதனின் உணர்வுகளை புரிந்து கொண்டாள்.தனிமை.கடும் முயற்சி.பொறுப்புணர்ச்சி.தேடிக் கற்று, விளைவுகளை வருமானமாக்கும் ஆற்றல் அதிகம் அவனிடம் இருந்தது.
அந்த ஊரில் வரதனை இவையெல்லாம் தனித்துக் காட்டின.வெள்ளிடை மலையாக இருந்தான்.மலைமேல் விளக்காக ஒளிர்ந்தான்.

அந்த வரதனை துளசி இப்போது காதல் செய்கிறாள்.தன் வருங்காலம் அவனோடு சேர்ந்தமைந்திட விரும்பி.

வளர்ப்பு தாயின் பராமரிப்பு பொறுப்பில்லாமல் போனது.இருக்க வீடு மறுக்கப்பட்டது.உண்ண உணவும் கூட.பிள்ளை இப்போது வேலையாள்.வேலை செய்தால் உணவு.இல்லை உணவு மறுப்பு.
வளர்ப்பு தாயின் எல்லா சகோதரர்களுக்கும் இப்போது வரதன் கூலியாளாக மாற்றப்பட்டிருந்தான்.குறைந்த சம்பளம்.அதிக நேர வேலை.மழை வெய்யில் இல்லை.இரவு பகலும் கூட. காசு மிச்சம் அவர்களுக்கு.வேலையாளை ஊட்டி வளர்த்து வேலை வாங்கிப் போதல் கோவிலுக்கு நேர்ந்த கிடாய் போல.

இத்தனையும் அம்மா என்ற ஒற்றை வார்த்தையால் திரையிடப்பட்டிருந்தன.அம்மாவின் அன்பால் ஆழமாக இணைந்து போன வரதனுக்கு இவை துன்பமாக தெரியவில்லை.இவையெல்லாம் தன் கடமை என்றான்.

எந்த எடுத்துரைப்புக்களையும் அவன் செவிசாய்த்து கேட்டதில்லை.
துளசி கூட முயன்று தோற்றுப் போயிருந்தாள்.இப்போது அவன் தன் தாய்க்கு அடுத்து அதிக அன்பு கொண்டிருப்பது துளசி மீதுதான்.

வரதனின் அன்புக்கு அடிமையானள் துளசி.அவனது துயரில் தன்னை இணைத்தாள்.பாடசாலைக்கு கொண்டு போக வீட்டில் வாங்கும் சிறு தொகையை வரதனிடம் கொடுப்பாள்.

தனக்கென தனி வகுப்பு கேட்டுப் படித்தாள்.அந்த சூழலை வசதியாக்கினாள். 
சிறு தொகை கொடுத்து நொருக்குத் தீனி வாங்கி வர வைத்து சேர்ந்து உண்டாள்.
பாடங்களை படித்துக் கொண்ட படி.
வரதனையும் உண்ண வைத்துப் பார்த்தாள்.

பழக்கம் நீண்டது.ஆழமானது.துளசியின் மாறல்களை கண்ணுற்ற வரதன் துளசியின் காதல் உணர்வுகளை தெளிவாக புரிந்து கொண்டான்.
இருந்தும் தான் எதையும் வெளிக்காட்டவில்லை.

அப்போது அவன் இருந்த மன நிலையில் அவனிடம் தனக்கென யாரும் இல்லை என்ற உணர்வு மேலொங்கத் தொடங்கியிருந்தது.அவன் வளர்ப்புப் பிள்ளை என்பதை அவனது வளர்ப்புத் தாய்,  அவனிடமே சொல்லி வைத்து விட்டாள்.

எதிர்பாராத ஏமாற்றம்.அளவற்ற அன்பு வீணாக்கப்பட்ட கவலை.

இருந்தும்,

துளசியின் அதீத அரவணைப்பு.குழைவான பேச்சு. புதிதான ஆழமான அன்பு மலர்ந்து கொண்டிருந்ததை நன்றே புரிந்திருந்தான்.அம்மாவின் ஏமாற்றம்.துளசியின் அரவணைப்பு.

பிறப்பிருந்தால் இறப்பிருக்கும்.இறப்பிருந்தால் பிறப்பும் இருக்க வேண்டும்.என்பதற்கு ஒரு ஒத்திசை உதாரணமாக இது அமைந்தது.

இன்னும் துளசி தன் காதலை வரதனிடம் சொல்லவில்லை.

அன்றைய வகுப்பில் கொஞ்சம் கதைத்துக் கொண்டான் வரதன்.மனமாறிக் கொள்ள.தொடங்கியது துளசிதான்.அவனது வீட்டுச் சூழலைப் பற்றி.

" அம்மா இல்லை என்றதும் என்னால் அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை.இனி எப்படி இருக்கப் போகிறதோ என் வாழ்வு" என்று தன் ஏக்கத்தை மனம் திறந்து பேசிக்கொண்டான்.

" நான் உங்களோடு இருப்பேன். நீங்கள் கவலைப்படாதையுங்கோ" என்றாள் துளசி.

சிரித்தவாறே சொன்னான் வரதன்.

" அப்படி எப்படி இருப்பிங்கள்."

" நான் இருப்பன்.எப்பவும் உங்களோடேயே! " என்று உறுதியான குரலில் நம்பிக்கையோடு சொன்னாள் துளசி.

"அது தான் எப்படி இருப்பிங்கள்.அப்படி இருந்தால் சந்தோசம் எனக்கு".என்றான்.
" உங்களை திருமணம் செய்தால் நான் உங்களோடு தானே இருப்பேன்." என்றாவளை வரதன் ஆச்சரியமாக பார்த்தான்.
இப்படியும் காதலைச் சொல்ல முடியுமா?

" உண்மையாகவா?" ஒற்றை வார்த்தையில் ஒரு வசனம் பேசி அமைதியானான்.

துளசியும்  மொழியில்லாத,  ஒலியில்லாத வார்த்தை கோர்த்து ஆமோதித்து புன்னகை பூத்திருந்தாள்.
                                                                                 ........ அன்புடன் நதுநசி