துாதுவளை ரசம் சுவைக்கு மட்டுமல்ல சளிக்கும் ஏற்றது. இதனை வைக்கும் முறை...
சிலருக்கு சளித்தொல்லை பெரும்பாடாக காணப்படும். குழந்தைகளுக்கும் இப்பிரச்சினை காணப்படும். இவர்களுக்கு சளித்தொல்லையிலிருந்து விடுபட துாதுவளை ரசம் மிகவும் ஏற்றது. இன்றைய சமையலில் துாதுவளை ரசம் செய்யும் முறையைப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
- தூதுவளை இலை – 1 கைப்பிடி
- புளி – எலுமிச்சை அளவிற்கு
- சின்னவெங்காயம் – 6 பொடியாக நறுக்கியது
- மிளகு -2 டீஸ்பூன்
- சீரகம் – 1 டீஸ்பூன்
- பூண்டுப்பற்கள் – 10
- கடுகு – 1 டீஸ்பூன்
- பெருங்காயத்தூள் – 1 டீஸ்பூன்
- துவரம்பருப்பு -1 டீஸ்பூன்
- தக்காளி -2
- காய்ந்தமிளகாய் – 3
- மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
- கொத்தமல்லி இலை – தேவையான அளவு
- கருவேப்பிலை – தேவையான அளவு
- எண்ணெய் – 1 டீஸ்பூன்
- உப்பு – 1 டீஸ்பூன்
செய்முறை
படி– 1:
முதலில் ஒரு பாத்திரத்தில் நாம் எடுத்து வைத்திருந்த எலுமிச்சை அளவிலான புளியை தண்ணீர் ஊற்றி ஊற விடவும். பின்னர் ஒரு மிக்சி ஜாரில் 2 டீஸ்பூன் மிளகு, 1 டீஸ்பூன் சீரகம், 10 பூண்டுப்பற்கள், 1 டீஸ்பூன் துவரம்பருப்பு மற்றும் 1 கைப்பிடி அளவிலான தூதுவளை இலை போன்றவற்றை சேர்த்து நன்கு ஒன்று இரண்டு தடவை அரைத்துக்கொள்ளல் வேண்டும்.
படி – 2:
பிறகு நாம் ஊறவைத்திருந்த புளியை நன்கு கரைத்த பின்னர் அதிலிருந்து புளித்தண்ணீரை மட்டும் பிரித்து வைத்து கொள்ளுங்கள். பின்னர் அந்த புளித்தண்ணீருடன் நாம் எடுத்துவைத்திருந்த 2 தக்காளியை நன்கு கரைத்து கொள்ளுங்கள்.
படி – 3:
அடுத்து அடுப்பை பற்றவைத்து அதில் ஒரு கடாயை வைத்து அதில் 1 டீஸ்பூன் எண்ணெயை ஊற்றி அதனுடன் 1 டீஸ்பூன் கடுகு சேர்த்து கடுகு பொரிந்தவுடன் அதனுடனே 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள், 3 காய்ந்த மிளகாயை இரண்டாக உடைத்து சேர்த்துக் கொள்ளவும்.
படி – 4:
மிளகாய் நன்கு வதங்கிய பிறகு அதனுடன் நாம் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்குங்கள். பின்னர் அதனுடனே சிறிதளவு கருவேப்பிலையையும் சேர்த்து வதக்க வேண்டும்.
படி – 5:
இவை அனைத்தும் நன்கு வதங்கிய பிறகு அதனுடன் நாம் முன்பு படி-1-ல் கூறிய அரைத்து வைத்த தூதுவளை இலை விழுதை சேர்த்து நன்கு வதக்குங்கள். அதனுடன் கரைத்து வைத்திருந்த புளித்தக்காளி கரைசலை சேர்த்த பின்னர் அதனுடன் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கொதிக்க விடுங்கள்.
ரசம் ஒரு கொதி வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி அதன் மேலே நாம் எடுத்துவைத்திருந்த கொத்தமல்லி இலையை நன்கு பொடி பொடியாக நறுக்கி துாவிக் கொள்ளுங்கள்.
இனி நீங்கள் இந்த துாதுவளை ரசத்தை சளித்தொல்லையுள்ளவர்களுக்கு பரிமாறலாம்.