இன்றைய சிறுகதை. கவியின் அண்ணா... - நதுநசி
கவியின் அண்ணா
******************************
காலை வேளை.இளம் சூரியக்கதிர்கள் பனி மீது மோதி அவற்றை வைரம் போல மின்ன வைத்துக் கொண்டிருந்தன.வண்ணத்துப் பூச்சிகளும் தேனீக்களும் அதிகமாகவே பூக்கள் மீது போர் செய்துகொண்டிருந்தன.அந்த காலையில் பொன்னொளி போல தென்னோலை இடையே ஒளிக்கீற்றுக்கள் நிலத்தில் விழுந்து வெண்மணல் பரப்பில் ஒரு இனிய இரசணையைக் கூட்டின.
மனதைப் பறிகொடுத்து காலை வேலைகளை சிரமமின்றி சீராக சீக்கிரத்தில் முடித்திட நினைத்திருப்பாள் போல காயா.
வாளியில் இருந்த தண்ணீரை கையால் அள்ளி வீசினாள் முற்றத்து மணல் மீது. அவற்றில் சில துளிகள் சற்றுத் தொலைவில் இருந்த செவ்வந்தி பூக்கள் மீதும் பட்டன.அந்தப் பூக்களில் இருந்த வண்ணத்துப் பூச்சிகளும் சிறகடித்துப் பறந்தன.
முற்றத்தைக் கூட்டும் போது எழும்பும் தூசால் பூக்கள் புழுதி படிந்து அழுக்காகிப் போனால் களையிழந்து போகும் என நினைத்திருப்பாளோ என்னவோ?
நனைந்த முற்றத்தில் விளக்குமாறு போட்டுக் கூட்டினால் முத்தம் வடிவாகத் தான் இருக்கும்.அந்த இரசணை காயா வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் இருக்கிறது.
காயாவின் அப்பா சினத்தம்பி.முன் படலையருகே செம்பரத்தம் மரத்துக்குப் பக்கமாக மாமரத்தின் கீழ் கட்டியிருந்த அந்த சிவத்த பசு இலட்சுமியில் பால் கறந்து கொண்டிருந்தார்.அந்த பசுவின் கன்றுக்குட்டிக்கு குறும்பு அதிகம்.அடிக்கடி சின்னத்தம்பியண்ணையை மெல்ல செல்லமாக முட்டி விளையாடிக்கொண்டிருந்தது.
காயாவின் அம்மா செல்லக்கா அடிக்கடி படலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"என்னம்மா. படலைப்பக்கமாய் அடிக்கடி எட்டிப் பாக்கிறிங்கள்?"
அப்போது தான் நித்திரைக்கு விடை கொடுத்த கவி வெளியில் வந்தாள்.
அவள் யாழ்ப்பாணத்து பல்கலைக்கழகத்தின் கலைப்பிரிவு மாணவி.
நேற்றுத் தான் பல்கலைக்கழக விடுப்பில் வீடு வந்திருந்தாள்.
அன்றைய பொழுது சமாதான உடன்படிக்கைக் காலம்.
பிரபா - ரணில் ஒப்பந்தத்தால் வந்திருந்தது.போர் ஓய்து இலகுவான பயமின்றி பயணங்கள் அப்போது சாத்தியமாகியிருந்தன.
கவி வந்திருப்பதால் அவளது அண்ணா கயன் வருவதாக சொல்லியிருந்தான்.அவனைப் பார்த்துக் காத்திருந்த செல்லம் அக்கா படலையை அடிக்கடி பார்த்துக்கொண்டிருந்தாள். கவி வினவிய போதும் கயனின் வருகையை சொல்லாமலே வைத்திருந்தாள்.
வருவதாக சொல்லும் கயன் சிலவேளை திடீரென வேலை வந்து விட்டதாக சொல்லி வராமல் விடுவது வழமை.
வீட்டு முற்றத்தில் இருந்து படலை வரை இரு மருங்கும் செவ்வரத்தை வளர்க்கப்பட்டு அழகாக வெட்டப்பட்ட போதும், குருத்திட்டு அவை பூத்திருந்தன.அவற்றுக்கு முன் செவ்வந்தி ஒரு திரையிலும் அதற்கு முன்னால் யப்பான் ரோசா பூங்கன்றும் வளர்க்கப்பட்டிருந்தன.
எந்நேரமும் ஈரலிப்பான நிலமாக இருந்ததால் அவை செழிப்பாக வளர்ந்து சூழலை அழகாக்கி கவியின் இரசணைக்கு தீனி போடடுக்கொண்டிருந்தன.
கவி அவற்றை பார்த்தவாறு படலை நோக்கி மெல்ல நடந்தவாறிருந்தாள்.அன்னம் நடப்பது போல நடன அசைவை அவள் தன் நடையில் கொணடிருந்தாள். மெல்லிய உடலைக் கொண்ட கவிக்கு உடுக்கிடைத் தோற்றம் போட்டிருந்த அந்த உடைக்கு அவளை எடுப்பாக காட்டியது. சிவந்த மேனி எனச் சொல்லுமளவுக்கு நிறம் கொண்டவளை பனியோடு கூடிய சூரிய ஒளி மெருகூட்டி அழகாக்கியது.
மாசி மாத இறுதிப்பகுதி.பனி மெல்ல பொழிந்துக்கொண்டிருந்தது.பூக்களில் பனித்துளிகள் படிந்திருந்தன.முத்துக்களை வைத்து ஒட்டியது போல அவை இருந்தன.
இடையிடையே கவி பூக்களில் இருந்து வண்ணத்திகளைத் தொட்டுப்பார்க்க முயன்று தோற்றுப் போனாள்.அவள் தொடப் போகும் போது அவை பறந்து போய்விடும். பூவிலிருந்து பனித்துளிகளைத் தட்டிவிட்டு நடந்தாள்.
படலை வரை வந்து விட்டாள்.படலையைத் திறந்து வீதியோரப் புதினங்களை பார்த்தவாறு நின்றாள்.
பேரூந்து ஒன்று வந்து படலைக்கு சற்றுத் தொலைவில் வாசிகசாலைப் பக்கமாக நின்றது.வட்டக்கச்சி சந்தியில் திரும்பிய அந்த பேரரூந்து சில்வா வீதியூடாக வட்டக்கச்சி மகாவித்தியாலயம் வரை சென்று கிளிநொச்சிக்குப் போகும்.
அந்த பேரூந்தில் இருந்து கயன் இறங்கி வந்தான்.
நேர்த்தியாக வெட்டப்பட்ட தலைமுடி.அழகாக மழிக்கப்பட்டு விடப்பட்டிருந்த சிறிய எடுப்பான மீசை.தாடியில்லாத நாடி.பளிச்சிடும் சிறிய கண்கள். அழகாக வளைந்த கன்னங்கள்.
நிமிர்ந்த உடலுக்கு சீராக உடுக்கப்பட்ட ஆடை அவனை ஒரு இராணுவ வீரனின் தோற்றத்தில் நோக்க வைத்திருந்தது.வண்டியில்லா அவனது தேகம் ஆண் என்ற மிடுக்கோடு எடுப்பாக இருந்தது.தோளில் கொழுவியிருந்த பையை கழற்றி எடுத்தவாறு இறங்கி கவியின் வீட்டை நோக்கி திரும்பி நடக்கத் தொடங்கியிருந்தான்.
பேரூந்தில் இருந்த போதே வீட்டை நோக்கி இருந்த கயன் கவி படலையில் நிற்பதை நோக்கியிருந்தான்.நேற்று வந்த கவி வீடு வந்துவிட்டாள் என்ற தகவல் அவனுக்கு தெரிவிக்கப்பட்டும் இருந்தது.
கயன் நீண்ட காலம் வீட்டை விட்டு தூர இடத்தில் வேலை செய்துகொண்டிருந்தவன்.அதற்கு முன் மணலாறு, முல்லைத்தீவு என்று சற்றுத் தூரத்தில் இருந்தது வேலை செய்து விட்டு, சில காலம் கவிக்கு அருகில் இருந்தும் யாழ்ப்பாணத்தில் சில பணிகளில் ஈடுபட்டிருந்தவன்.ஆனாலும் இருவருமே ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டது பத்து வருடங்களுக்கு மேலாகின்றது.
வீட்டுக்கு கூட இந்த பத்து வருடங்களில் சில தடவைகள் தான் வந்து போயிருக்கின்றான்.அன்று வந்தது தன் அண்ணா கயன் தான் என்பதை தெளிவாக இனம் காணமுடியாத கவி முளி பிதுங்க, யாரோ ஒரு புதியவர் வருவதாக எண்ணிக்கொண்டு வீடு நோக்கி திரும்பி நடக்கத் தொடங்கினாள்.
செல்லக்கா ஓடி வந்தாள்.கவியை விலகி விலக்கி விட்டு ஓடிச் சென்றாள்.கயனை கட்டித் தழுவி உச்சி மோந்து அணைத்துக்கொண்டாள்.முத்தமிட்டாள்.
அளவற்ற அன்பை கொட்டித் தீர்த்துக் கொண்டாள்.
திரும்பிய கவி அவளது அம்மாவின் செயலால் சற்றுத் திடுக்கிட்டுத் தான் போனாள்.
பால் கறந்து கொண்டிருந்த அவளது அப்பாவும் எழுந்து வந்து வந்த கயனைத் தழுவிக்கொண்டார்.
காயாவும் நீர்க்கோப்பையை ஓரமாய் வைத்து விட்டு கவியைத் தாண்டி ஓடிச் சென்று கயனை கட்டித் தழுவினாள்.
கவிக்கு மெல்ல மூளையில் ஒரு தட்டுத் தட்டிக்கொண்டது.இது யாராக இருக்கும்.?
கேள்வியோடு நின்றிருந்தாள்.
அம்மா, அப்பா, காயா சூழ நடந்து வந்த கயன் கவிக்கு அருகில் வந்து விட்டான்.
" என்ன கவி? அடையாளம் தெரியவில்லைப் போலும்."
நீண்ட காலம் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து உயர்தரமும் அதனைத்தொடர்ந்து பல்கலைக்கழக படிப்பையும் தொடர்ந்தவள் இன்று பல்கலையின் இரண்டாம் வருட மாணவியாக வளர்ந்திருந்தாள் கவி.
நீண்ட காலப் போராலும் பாதை பூட்டு இழுபறியாலும் வன்னிக்கு வந்து போகும் சிரமங்களால் அவளை யாழில் திருநெல்வேலியில் உள்ள சின்னத்தம்பியண்ணையின் தம்பி வீட்டில் தங்கி படிக்கும் வகையில் ஏற்பாட்டினைச் செய்திருந்தார் சின்னத்தம்பி அண்ணை.
இப்போது சாத்தியமான சமாதான உடன்படிக்கையால் நிலவிய அமைதியை பயன்படுத்திக்கொண்ட பிரிந்திருந்த உறவுகள் சந்தித்துக் கொள்ளுகின்றன.
"ஆர் கயனண்ணாவா?" கேள்வியோடு தாயைப் பார்த்தாள்.
"ஓம்" என்ற செல்லக்கா தலையை அசைத்தார்.
கவி விம்மி விம்மி அழத் தொடங்கி விட்டாள்.அப்படியே அசைவற்று ஓசையில்லாது கண்கள் குளமாக கண்ணீர் முட்டி ஆறென பெருக்கெடுத்து ஓட அழுதுகொண்டிருந்தாள்.
.........அன்புடன் நதுநசி.