தமிழ் மொழியில் ஈம வழிபாடு - முள்ளிவாய்க்கால் நந்திக்கடலில் மே-18

#SriLanka #Tamil People #Tamil #Mullivaikkal
Mayoorikka
11 months ago
தமிழ் மொழியில் ஈம வழிபாடு - முள்ளிவாய்க்கால் நந்திக்கடலில் மே-18


இது உண்மையாக இருக்க முடியாது, நாம் மீளெழுவோம், இது ஒரு கெட்ட கனவு!

 இதுவே மே 18 - 2009ல் காலத்தில் எம்மிடையில் நீடித்த முதற்கட்ட உணர்வாகும். இரண்டாவது கட்டத்தில், சோகம், கோபம், ஆத்திரம், பயம் மற்றும் அமைதியின்மை உணர்வுகள் அனைத்தும் ஒரே நேரத்தில் தோன்றின, குற்றவாளிகளை உள்ளத்தில் தேடித்தோற்றோம். 

 துக்கத்தின் மூன்றாம் கட்டத்தில், அறைகளில், நிலப்பரப்புகளில், புகைப்படங்களில், உள்ளத்து கற்பனைகளில் நாம் இழந்த உறவுகளை தேடிக்கொண்டோம். நான்காவது கட்டத்தில், இழந்த எம் இனத்து உறவுகள் எம்முள் உள்ளுருவமாக மாறிவருகின்றனர்.

 2009 முதல் 2023 வரை தமிழர்கள் நாம் துக்கத்தை மேலே குறிப்பிட்ட வகையில் சமாளித்தும் கையாண்டும் வந்துள்ளோம். முள்ளிவாய்க்கால் மண்ணில் மே18 நீத்தார் நினைவுவழிபாடு 18. 05. 23 வியாழக்கிமை காலை 07.30 மணிமுதல் நடைபெற்று, ஈமவழிபாடு நந்திக்கடலில் ஆற்றிவைக்கப்படவுள்ளது. 

 அகில இலங்கை சைவத்தமிழ் மன்றம் தமிழர் பாரம்பரிய வழிபாட்டு அமைப்பு, நம் உறவுகளுக்கு நாமே கை கொடுப்போம், சைவநெறிக்கூடம், ஆகிய நான்கு அமைப்புக்களும் இணைந்து சைவநெறியில் தெய்வத் தமிழில் வழிபாட்டுச் சடங்கினை ஆற்றிவைக்க முன்வந்துள்ளன. 

 துக்கம் - துயரம் உள்ளத்தின் ஒரு உணர்ச்சி நிலை இத்தனை உளச்சோர்வு, உணர்ச்சியற்ற உணர்வின்மை எனவும் அறிவோம். மே 18ல் எமது இனத்தின் வலிசுமந்து தமிழர்கள் நாம் பெரும் துக்கத்தை உறைதல் போன்ற உணர்வினை தமிழினமாகத் தாங்கி நிற்கின்றோம். 

வலி, பீதி, சோகம், கோபம், குற்ற உணர்வு, வாழ்க்கைக்கான ஆர்வமின்மை, உணர்ச்சி விலகல் ஆகிய உணர்வுகளை எமக்கு மீளளிக்கும் மாதமாக இம்மாதம் அமைகின்றது. 

ஆனால் இவற்றில் இருந்து விடுபட்டு மீள் எழவேண்டியதும் எம் கடமை ஆகும். இழப்பினை ஆற்றுப்படுத்தி உறவுகளை இழந்தவர்கள் தம்மை மீளச் சீர்செய்து கொள்ள வேண்டியதும் இக்காலத் தேவையாகும். மனித வாழ்வில் இறுதிச் சடங்கு பல்சமயங்களிலும் தனித்ததுவமாக அமைந்துள்ளது. 

துக்க காலத்தில் அணியும் ஆடைவகைகள் மற்றும் துக்கம் கடைப்பிடிக்கும் கால அளவுகள் என விதிகள் பலவும் உள்ளன. தமிழர்களுக்கும் தனித்துவமான பண்பாடு உண்டு. 

பேரிடர் காலத்து இழப்புகளுக்கு அரசாங்கத்தால் ஆணையிடப்படும் தேசிய துக்கமும் கடைப்பிடிக்கப்படுவது உலகவழக்காகும். ஆனால் எம் இனம் பெருவலிகள் சுமந்து 2009ம் ஆண்டு மே 18ல் பேரழிவிற்கு ஆட்பட்டபோது, அத் துயரத்தை ஒரு பரந்த இரங்கல் செயல்முறையில் கட்டற்று நினைவுகொள்ள வாய்ப்புக்கள் அமையாதுபோனது தமிழ்மக்களுக்கு பெரும் வலியாக பதிந்துள்ளது. 

 பொதுவாக உடற் செயல்பாடுகளாலும் அல்லது செயற்கையான கவனச்சிதறலாலும் துக்கத்தை அடக்கலாம் அல்லது தற்காலிகமாக துக்கத்தை தள்ளிவைக்கலாம் விடுவிக்கலாம், ஆனால் இது தமிழினத்தின் பெருவலியை தாங்கிக்கொள்ள சரியான தீர்வாகாது... 

 இனரீதியான இறுதிச் சடங்குகள் அல்லது சமயச் சடங்குகள் மற்றும் இறுதிச் சடங்குப் பண்பாடு உற்றார் உறவினற்கு ஆற்றுப்படுத்தலாக அமையும். ஆனால் ஒருசில சதுரநிலத்திற்குள் கொத்துக்கொத்தாக இறந்தவர்களை நினைவில் கொள்ளமுடியாமலும், உரிய முறையில் சடங்கு ஆற்றமுடியாதும் போனது என்பது தமிழ் உறவுகளின் ஆறா வடுக்களாக தமிழ்மக்களுக்கு மீண்டும் மீண்டும் துக்கத்தைக் கொண்டு வந்து கடுமையான உள்ளத்து அழுத்த எதிர்வினையாம் அதிர்ச்சியினை அளிக்கின்றது. 

மே 18ன் எண்ணங்கள் எதிர்காலத்தைப் பற்றிய கேள்வியை எழுப்பிநிற்க, மறதி மற்றும் செறிவு இழப்பு ஆகியவற்றிற்கு எதிராகவும் நாம் நிமிரவேண்டிய தேவையினையும் எடுத்தியம்புகின்றது. 

 ஈழத்தில் கொடுஞ்சூழலில் உறவுகளை இழந்த எம் தமிழ் உறவுகள் தாயகத்திலும், புலத்திற்கு அப்பாலும் குற்ற உணர்வு, உடல்நலக்குறைவு, உளச்சோர்வு போன்ற இடுக்கண்களை நுகர்கின்றோம். காயங்கள் காலத்தால் நலமாகும் துக்கப்படுபவர் உளநிகர்நிலையை தானே மீட்டெடுப்பார் என நாம் சோம்பியிருத்தல் நன்மை அளிக்காது. 

இழப்பிலிருந்து நாமாக புதிய முன்னோக்குகள் நோக்கி நகரவும் வேண்டும். 18. 05. 2023 தாய்மொழியில் நடாத்தி வைக்கப்படும் ஈம வழிபாடு அரசியல் பிற நோக்கற்கு, சமய நம்பிக்கைக்கு அமைவாக உயிர்களுக்கு வீடுபேற்றையும், தோன்றாப் பெருமையன் இணையடியில் நற்பேற்றையும், நலன்பேண் செயலாக உறவுகளை இழந்தவர்களுக்கு ஆற்றுப்படுத்தலையும் கொடுக்க வேண்டும் என்பதே இவ்வழிபாட்டின் நோக்காகும். இனத்தின் துக்கத்தைக் தமிழ்ப்பண்பாட்டு மற்றும் சமயரீதியான ஆற்றுப்படுத்தலை நல்வளமாகக் கொண்டு மீளெழுவோம். இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு.