இனவழிப்பின் அடையாளமாக எவ்வாறு முள்ளிவாய்க்கால் உள்ளதோ! அவ்வாறே கஞ்சியும்

#SriLanka #Mullaitivu #Mullivaikkal
Mayoorikka
11 months ago
இனவழிப்பின் அடையாளமாக எவ்வாறு  முள்ளிவாய்க்கால் உள்ளதோ! அவ்வாறே கஞ்சியும்

முள்ளிவாய்க்கால் கஞ்சி என்பது ஒரு இனப்படுகொலையின் நினைவுப் பொருள்.

 முள்ளிவாய்க்கால் கஞ்சியின் சிறப்பே, அதன் அடையாளமே சுவை அற்ற கஞ்சி என்பது தான் .

முள்ளிவாய்க்கால் கஞ்சி என்பது தமிழ் இறையாண்மை கஞ்சி.

 இறுதிக்கட்டப் போரில் வன்னி கிழக்கில் அகதிகள் புனர்வாழ்வு கழகம் கொட்டில்களை அமைத்து கஞ்சி காய்ச்சி வழங்கியது. 

2009 மே18 மௌனிக்கப்பட்ட எம் விடுதலைப் போராட்டம் இறுதி நாட்கள் நகர்ந்து கொண்டிருந்த நாட்களில், வன்னிப் பெருமண் மீது இலங்கை அரசு செய்திருந்த பொருளாதார, மருத்துவத் தடைகள் வலுப்பெற்றன. 

 நிவாரணப் பொருட்களின் வருகை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் இவ்வாறான தடைகளை எதிர் கொள்ள முடியாது ஏற்பட்ட நிலையில் பட்டினிச் சாவை முறியடித்து எம் மக்களை உயிர்காக்கும் செயற்பாட்டைச் செய்ய வேண்டும் என்ற நிலை எழுந்தது. 

 இந்த நிலையில் தமிழீழ தேசியத்தலைவரது கட்டளைக்கேற்ப தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறையின் நிர்வாக சேவைப் பிரிவும், சர்வதேச அரசசார்பற்ற நிறுவனமான தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் இணைந்து செயற்படுத்திய திட்டமே இந்த “கஞ்சித் திட்டம்”. 

 15 இற்கும் மேற்பட்ட நிலையங்கள் இரணைப்பாலைப் பகுதியில் ஆரம்பித்து புதுமாத்தளன் பகுதியில் விரிவாக்கம் அடைந்து முள்ளிவாய்க்கால் வரை இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

 இறுதி வரை சேமிக்கப்பட்டிருந்த உணவுப்பொருட்களின் களஞ்சியங்களில் இருந்தும் பலநோக்குக் கூட்டுறவுச்சங்கங்களிடம் இருந்த குறுகிய அளவிலான அரிசியிலும் இத்திட்டத்தை கஞ்சித்திட்ட பொறுப்பானவர்கள் நடைமுறைப்படுத்தினார்கள். 

 கஞ்சிக்குப் பயன்படுத்துவதற்கு உப்பு இறுதிவரை களஞ்சியங்களில் இருந்தாலும் அரிசிக்குத் தான் தட்டுப்பாடு வந்தது. ஆனாலும் கஞ்சித்திட்டம் இறுதியாக முள்ளிவாய்க்கால் வரை இடைநிறுத்தாமல் வழங்கப்பட்டது.

 இரணைப்பாலையில் நடைமுறைப்படுத்த ஆரம்பித்த போது நீரில் அரிசியும் உப்பும் தேங்காய்ப்பாலும் சேர்த்து சமைக்கப்பட்ட கஞ்சியை உணவாக வழங்கிய போதும் பின்நாட்களில் தேங்காய்த் தட்டுப்பாடு காரணமாக அங்கர் பால்மாவை கரைத்து சேர்த்த கஞ்சி வழங்கப்பட்டது. 

 தொடர்ந்த நாட்களில் அங்கர் பால்மாவின் இருப்பும் குறைந்த போது தனித்து உப்பு மட்டும் சேர்த்த கஞ்சி மக்களுக்கு வழங்கப்பட்டது. இதையே எம் மக்கள் உண்டு பசியாறினார்கள். இதை யாரும் மறக்கவோ மறுக்கவோ முடியாது.

 இனவழிப்பின் அடையாளமாக முள்ளிவாய்க்கால் எவ்வாறு உள்ளதோ அவ்வாறே கஞ்சியும் எங்களின் வாழ்வியல் அடையாளமாக்கப்பட்டது. 

 இந்த நிலையில் தான் யுத்தம் முடிவடைந்து நினைவேந்தல் அனுஷ்ட்டிக்கப்பட்டு வரும் காலங்களில் இந்த யுத்தத்தில் எம் மக்கள் பசியாற்றிய கஞ்சியை எதிர்வரும் சந்ததியினருக்கு தெரியப்படுத்தும் விதமாக தமிழ் சிவில் சமூக அமைப்பினால் குறித்த கஞ்சி பரிமாறும் திட்டம் கொண்டுவரப்பப்பட்டது.

 இந்த நிலையில் இந்த ஆண்டும் பல்கலைக் கழக மாணவர்களினால் கஞ்சி வழங்கும் திட்டம் வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

 தமிழ்மக்களின் அடையாளமாக இருக்கின்ற கஞ்சியின் ஊடாக எங்களுடைய அடுத்த தலைமுறையினருக்கும் முள்ளிவாய்க்காலின் வலிகளை உணர்த்த வேண்டும்.

 இந்த கஞ்சியில் சுவைக்கே இடமில்லை. இது பசியாற்றிய கஞ்சி இந்த நிலையில் எவ்வாறு இறுதிக்கட்ட யுத்தத்தில் எம் மக்கள் குறித்த கஞ்சியை சுவையில்லாம் வெறுமனே பசியாறுவதற்காக குடித்தார்களோ அதே போலவே தற்போதும் அந்த கஞ்சியை சுவையற்றதாகவே வழங்க வேண்டும். 

ஆனால் தற்பொழுது வழங்கப்பட்டு வரும் கஞ்சியில் யார் சுவையாக காய்ச்சுவது என்ற போட்டியும் இருப்பதாக கடந்த சில நாட்களில் பேசப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகின்றது.

 ஆகவே அவ்வாறு அல்லாது இறுதி யுத்தத்தின் போது எவ்வாறு முள்ளிவாய்க்காலில் அரிசியில் வெறும் உப்பும் தண்ணீரும் விட்டு காய்ச்சி கொடுக்கப்பட்டதோ அவ்வாறே அந்த கஞ்சியை எந்த சுவையும் மாறாமல் வழங்குவதே சிறந்தது.

 அப்போது தான் எம் மக்களின் வலிகளை அடுத்த தலைமுறையினருக்கு கடத்த முடியும்..

மே 18 ஆம் திகதி அன்றாவது எம் வீடுகளில் கஞ்சியை உணவாக்குவோம்.