பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

#SriLanka #Parliament
Mayoorikka
10 months ago
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயங்காது என்றும் கடந்த காலங்களில் பேசப்பட்டு வந்த இவ்வாறான எம்.பிகள் தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். 

 மறைந்த ரெஜி ரணதுங்கவின் 15வது நினைவு தினத்தை முன்னிட்டு, உடுகம்பலையில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தியதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 வெற்றிபெறாத செயற்பாட்டாளர்கள் அரசாங்கத்திற்கு எதிராக மதவாதத்தையும் இனவாதத்தையும் தூண்ட முயற்சிப்பதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார். எந்தவொரு குழுவும் தேசிய அரசாங்கத்திற்கு வந்தால் அதற்கு பொருத்தமான வேலைத்திட்டத்தை ஜனாதிபதி நடைமுறைப்படுத்துவார் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

 புதிய அமைச்சரவை நியமிக்கப்படுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடிகளை தீர்க்க தேசிய அரசாங்கத்தை அமைக்க வருமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். 

அதற்கு இன்னொரு வாய்ப்பும் உள்ளது. எதிர்காலத்தில் தேசிய அரசாங்கம் அமைக்கப்படாவிட்டால் அதற்காக ஒரு குழு ஒன்று கூடினால் அதற்கு பொருத்தமான வேலைத்திட்டத்தை ஜனாதிபதி சிந்தித்து செயற்படுத்துவார்” என்றார்.

 இப்போது மதப் பிரச்சினை பெரிதாகி வருவதைக் காண்கிறோம். இதை ஒரு அரசாங்கம் எப்படி எதிர்கொள்ளும்? என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “இப்போது மதங்களுக்கு இடையே நெருக்கடியை உருவாக்கப் பார்க்கின்றார்கள். இது வெற்றி பெறாவிட்டாலும் இனவாதத்தை உருவாக்க முயல்வார்கள்.

 வெசாக்கிற்கு கறுப்புக்கொடி ஏற்றி கறுப்பு வெசாக் கூடு கட்டியவர்கள் இன்று மதத்திற்காக பேசுகின்றனர். 

போராட்டத்தில் இருந்த கலைஞர்கள் செய்ததை நாடு பார்க்கிறது. இதற்கு யார் பணம் செலவிடுவார்கள்? நாட்டில் மாற்றம் என்பது ஆட்சி மாற்றத்தைக் குறிக்காது. வழிமுறையில் மாற்றம் வர வேண்டும். அதற்கு மக்களின் அணுகுமுறையில் மாற்றம் தேவை. இதை புரிந்து கொள்ள வேண்டும். பொய் என்ற பெயரில் வெறுப்பை பரப்பி செய்த போராட்டத்தின் பலனை இன்று நாம் அனுபவித்து வருகிறோம்” என்றார்.

 சீன பிரஜை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “ இது குறித்து அரசாங்கம் தற்போது விசாரணை நடத்தி வருகிறது. அவர்களை அரசு தடுக்காது. சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதை அரசு செய்கிறது. 

இதில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாடு கிடையாது. தமது கட்சியாயிருந்தாலும் தங்கம் கொண்டு வந்த நபருக்கு தண்டனை வழங்கப்பட்டது. அத்தகைய தண்டனை பெற்ற பிறகு பாராளுமன்றம் வருவதா வேண்டாமா என்று அந்த நபர் தீர்மானிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.