தமிழ் போராளியும். தமிழ் அரசியல்வாதிகளும். ஒரு சிறிய சந்திப்பில் பெரிய பாடம்.

#SriLanka #history #Lanka4 #short story
Kanimoli
10 months ago
தமிழ் போராளியும். தமிழ் அரசியல்வாதிகளும். ஒரு சிறிய சந்திப்பில் பெரிய பாடம்.

இன்று மதியம் 12 மணி இருக்கும், யாழ்ப்பாணம் வருவதற்காக சித்தங்கேணி சந்தி தாண்டி வந்துகொண்டிருந்தேன், ஒரு 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் வெள்ளைப்பிரம்புடன் வழிமறித்தார் நானும் ஏதோ யோசனையில் நிற்காமல் கடந்து வந்துவிட்டேன், இருந்தும் கண்ணாடியில் பார்த்தபொழுது அவர் கண் தெரியாதவர் என்பதை அறிந்து பின்னோக்கி சென்று அவரை ஏற்றினேன்.

"ஜயா எங்க போகணும்

~ நேரயா போறீங்க தம்பி

ஓம் நீங்கள் எங்க போகணும்

~ என்னை சங்கரத்தை சந்தில இறக்கி விடுங்கோ பிறகு நான் உள்ளால நடந்து வீட்ட போறன்

ம்ம்... உங்களுக்கு எப்படி கண் தெரியாம போனது, பிறப்பில இருந்தோ

~ இல்ல இடையிட்டுத்தான்

எப்படி

~ சண்டைல

ஆ.. இயக்கத்தில இருந்தனீங்களோ

~ ஓ (எந்தவொரு சலனமும் இல்லாமல்)

எந்த சண்டைல

~ யாழ்ப்பாண சூரியகதிர் சண்டைல

ஆ... கண்தெரியாம போனதோட இயக்கம் ஏதும் உதவி செய்ததோ

~ ஓ.... அதில ஒரு பிரச்சினையும் இல்ல

இது செய்யேலாதோ

~ ஒரு கண் fபுள்ளா தெரியாது தம்பி, மற்றக்கண் சும்மா மட்டுப்பிடிக்கிற அளவுக்கு தெரியும் ஒப்பிரேசன் செய்து சரிவராட்டி இப்ப இருக்கிற அளவும் தெரியாம போயிருமாம் எண்டாப்போல நான் தேவல்ல எண்டு விட்டுட்டன்

இப்ப என்ன வருமானம்

~ கோழி வளக்குறம் தம்பி

ஆ....

~ மற்றும் படி வெளிநாட்டில இருந்து வாறாக்கள் ஐயாயிரம், பத்தாயிரம் கைக்க வைப்பினம் அத விட காணுற ஆட்கள்ட உதவியும் இருக்கு, இடைக்கிடை வெளிநாட்டு ஆட்கள்ட உதவியும் இருக்கு தம்பி

ஆ....

~ சிலபேர் ஐஞ்சுரூபா பத்துரூபா வைச்சாலும் நான் வாங்குவன் எல்லாருக்கும் வசதி இருக்காதுதானே தம்பி, பிறகு வாங்காம விட்டா திமிர் எண்டு நினைப்பாங்க என,
நான் யார் எவ்வளா தந்தாலும் வாங்குவன். குடுக்குற மனசு எல்லாருக்கும் வராது தானே.

அப்ப வேற வருமானம் ஒண்டும் இல்லையோ, கல்யாணம் கட்டிற்ரீங்களோ

~ ஓ நான் கட்டிற்றன் மூண்டு பிள்ளைகள் இருக்கு ஒருத்தன் யூனிவசிட்டி மற்றவனுக்கும் யூனிவசிட்டி கிடைச்சிட்டு மற்றவன் ஏஎல் படிக்கிறான்

ஓ... மூண்டும் பெடியளா

~ ஓ.. ஓ.. மற்றது நான் அந்த அமைப்புகள்ளையும் இருக்குறன் தானே (கண் தெரியாதவர்கள் உள்ள அமைப்பு) அதாலையும் கொப்பி புத்தகங்கள் எண்டு உதவியள் வரும், அப்படி ஒரு மாதிரி பிள்ளையள படிக்க வைச்சிட்டன்."

இப்படி கதைச்சு கொண்டு போக சங்கரத்தை சந்தி வந்துவிட்டது ஆனாலும் அவரை வீதியிலே இறக்கி விட எனக்கு மனம் வரவில்லை, அவருக்கு ஏதாவது பண உதவி செய்யோணும் என்று மனதில் தோன்றினாலும் அந்த நேரம் என்னிடம் பணம் இருக்கவில்லை.

" உங்கட வீடு எங்க எண்டு சொல்லுங்கோ நான் வீட்டில இறக்கிட்டு போறன்

~ உங்களுக்கு பிரச்சினை இல்லையா தம்பி நான் கொஞ்சம் உள்ளுக்க போகணும்

இல்ல பிரச்சினை இல்ல நான் கொண்டே விடுறன்

~ இல்ல தம்பி உங்களுக்கு என்ன அலுவலோ நீங்கள் இங்க வரைக்கும் கொண்டு வந்து விட்டதே பெரிய விசயம்

இல்ல இல்ல நான் கொண்டே விடுறன்

~ நன்றி தம்பி இதுக்குளால போங்கோ

(வீட்டு வாசலில்)

~ தம்பி பெரிய உபகாரம், நன்றி தம்பி நன்றி நன்றி

சரி நான் போய்ற்று வாறன்

~ ஓம் ஓம் சரி தம்பி வந்த வழி தெரியும் தானே போவீங்க தானே

ஓம் நான் போவன் சரி வாறன் போய்ற்று "

இந்த பதிவின் நோக்கம்

நாட்டுக்காக தன் வாழ்வையே தொலைத்த ஒரு மனிதனின் ஐந்து நிமிட உரையாடலில் எவ்வளவு படிப்பினைகள்.

தமிழ்த்தேசியம் பேசி அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் மத்தியில் தமிழ்த்தேசியத்துக்காக தன் வாழ்வையே தொலைத்த மனிதர்கள் அதிசயம்தான்.