சின்னத்திரை நடிகை சித்ரா வழக்கு; சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது தந்தை திடீர் மனு!
சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் தொடர்பான வழக்கு திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தை நாடிய சித்ராவின் தந்தை, அவரது கணவர் ஹேம்நாத் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மேலும், ஒரு முக்கியமான கோரிக்கையும் விடுத்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சின்னத்திரை நாடகத்தில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ்நாடு முழுவதும் புகழ்பெற்றவர் நடிகை சித்ரா. இவர் ஹேம்நாத் என்பவரை திருமணம் செய்திருந்த நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சென்னை நசரத்பேட்டையில் இருக்கும் ஒரு விடுதி அறையில் தூக்குபோட்ட நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டார்.
சித்ராவின் சடலம் மீட்கப்பட்ட விடுதியில், கணவர் ஹேம்நாத்துடன் அவர் தங்கி இருந்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. சித்ராவின் கன்னத்தில் நகக்கீறல்கள் இருந்ததால் அவரது மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டது. மேலும், நடிகை சித்ராவின் தந்தை காமராஜ், தனது மகளின் மரணத்துக்கான காரணத்தை கண்டுபிடிக்குமாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக பல்வேறு தரப்பிலும் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கு திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில், சித்ராவின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கின் விசாரணையை திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் இருந்து சென்னைக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.