திலீபனின் ஊர்தி மற்றும் கஜேந்திரன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து பேர் கைது!
தியாக தீபம் திலீபனின் ஊர்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 5 பேர் சீனன்குடா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் திகதி ஐந்து அம்ச கோரிக்கைகைளை முன்வைத்து உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து உயிரிழந்த திலீபனின் 36 வருட நினைவேந்தலை முன்னிட்டு திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியொன்று பொத்துவிலில் இருந்து அவர் உயிர்நீத்த இடமான யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியை நோக்கி பயணத்தை ஆரம்பித்தது.
நேற்றைய தினம், மூதூர், சேனையூர், தம்பலகாமம் பகுதிகள் ஊடாக திருகோணமலை நகரத்தை நோக்கி, குறித்த ஊர்தி பயணித்துக் கொண்டிருந்தபோது சர்தாபுரம் பகுதியில் சிலரால் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட பல தரப்பினர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்தநிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் ஐந்து சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களை இன்றைய தினம் திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சீனன் குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, திலீபனின் நினைவு ஊர்தி மீதான தாக்குதலுக்கு தமிழகத்திலிருந்தும் பல்வேறு அமைப்புகளிடமிருந்தும் கண்டன அறிக்கைகள் வெளிவந்த வண்ணமுள்ளமை குறிப்பிடத்தக்கது.