அடிக்கடி இரத்து செய்யப்படும் விமானங்கள் : விசேட கூட்டத்திற்கு ஏற்பாடு!

இலங்கையில் சமீபகாலமாக விமான தாமதங்கள் பற்றிய செய்திகள் அதிகமாக வெளியாகி வருகின்றன. குறிப்பாக விமானிகள் பற்றாக்குறையால் விமான தாமதங்கள் ஏற்படுவது வழமையான ஒன்றாக மாறியுள்ளது.
இந்த சூழ்நிலையில், நேற்றைய (01.10) தினம் நேபாளத்தின் காத்மாண்டு நகருக்குச் செல்லவிருந்த இலங்கை விமானம் இரத்து செய்யப்பட்டதால் சுமார் 200 பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.
தொழிற்சங்க நடவடிக்கையினால் விமானம் தாமதமாக புறப்பட்டதாக தெரிவிக்கப்படுவதாக பயணிகள் மத்தியில் இருந்த உள்ளூர் மருத்துவத்துறை அதிகாரி சிசிர ஜெயக்கொடி தெரிவித்தார்.
ஆனால் தொழிநுட்ப சிக்கல்கள் காரணமாக விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் விமான நிலையத்தில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
நாட்டின் தேசிய விமானப் போக்குவரத்து பிராண்டிற்கு களங்கம் ஏற்படுத்தும் இந்த விமான தாமதங்கள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள துறைமுக கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர், விமான தாமதங்கள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் இன்றைய தினம் (02.10) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா கூறினார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிர்வாக அதிகாரிகள் மற்றும் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளும் இதில் இணைந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.