பெண்களுக்கு எதிரான வன்முறை - இத்தாலியில் போராட்டம்

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்துமாறு கோரி இத்தாலி முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்கலைக்கழக மாணவி ஒருவர் இந்த மாதம் முதற்பகுதியில் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த மாணவி முன்னாள் காதலனால் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த நவம்பர் மாதம் 11 ஆம் திகதி தமது பட்டமளிப்பு விழாவுக்கான ஆடைகளை கொள்வனவு செய்வதற்காகச் சென்ற மாணவி காணாமல் போனார்.
தொடர்ந்து தேடும் நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், சில நாட்களின் பின்னர் குறித்த மாணவியின் உடல் ஒரு பள்ளத்தாக்கில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.
இந்த பின்னணியிலே, இத்தாலியின் Milan மற்றும் Naples நகரங்களில் பெருந்திரளான போராட்டக்காரர்கள் ஒன்று கூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, பெண்கள் கொலை செய்யப்படுவதனை பொறுத்துக்கொள்ள முடியாது என இத்தாலி ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன், பெண்களுக்கு எதிரான வன்முறை சமூகத்தின் தோல்வி என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், நாட்டில் இந்த ஆண்டு இதுவரை 106 பெண்கள் கொல்லப்பட்டுள்ளதாக இத்தாலி உள்விவகார அமைச்சின் தரவுகள் தெரிவித்துள்ளன.
இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் 55 பேர் காதலன் அல்லது முன்னாள் காதலினால் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இத்தாலியில் கடந்த ஐந்து வருடங்களில் 538,000 பெண்கள் தமது உறவினர்களினால் உடல் அல்லது பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதன்படி, 2018 ஆம் ஆண்டு மாத்திரம் குடும்ப வன்முறை காரணமாக 142 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
குறித்த எண்ணிக்கையானது முந்தைய ஆண்டைவிட 0.7 வீத அதிகரிப்பாகுமென இத்தாலிய ஆராய்ச்சி நிறுவனமான Eures தெரிவித்துள்ளது.
இதேநேரம், 2017 ஆண்டில் மாத்திரம் உலகளாவிய ரீதியில் 87,000 பெண்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.



